உலக வாழ் பௌத்த மக்கள் உயர்வாக போற்றும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வருடாந்தம் இடம்பெறும் எசல பெரஹர பாரம்பரிய மரபுகளை பேணி இம்முறையும் வெற்றிகரமாக நிறைவடைந்ததை குறிக்கும் ஆவணம் தியவடன நிலமே நிலங்க தேல அவர்களினால் 26ம் திகதி பிற்பகல் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஊர்வலமாக ஜனாதிபதி மாளிகைகைக்கு வருகைதந்த தியவடன நிலமே நிலங்க தேல அவர்கள் உள்ளிட்ட தேவாலைகளின் நிலமேக்களை ஜனாதிபதி மாளிகையின் வாயிலில் ஜனாதிபதி அவர்கள் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து தியவடன நிலமேயினால் பாரம்பரிய மரபுகளின் படி குறித்த ஆவணம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பௌத்த நாடு என்ற வகையில் நாம் உலகிற்கு வழங்கக்கூடிய உன்னத சொத்து பௌத்த தத்துவமாகும் என்று தெரிவித்தார். தேரவாத பௌத்த சமயத்தின் மத்திய நிலையமான எமது நாட்டின் பௌத்த மரபுரிமைகள் மற்றும் கலாசாரம் குறித்த உன்னத செய்தியை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா பெரஹர உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த பெரஹரவின் மூலம் எமது நாட்டின் வரலாற்று பின்புலம் மற்றும் கலாசார மரபுரிமைகளுடன் ஒழுக்கப் பண்பாடுகள், பௌத்த தத்துவத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு என்பன வெளிப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்த பாரம்பரிய மரபுரிமைகளையும் வரலாற்று பெறுமானங்களையும் தொடர்ந்தும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டியதன் பொறுப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எசல பெரஹரவை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
பெரஹரவில் கலந்துகொண்ட கலைஞர்களுக்கு பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி அவர்களினால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
நாற்பெரும் தேவாலயங்கள் மற்றும் வெளிப்பிரதேச தேவாலயங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அவர்களினால் நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
‘புண்ணியமிகு தலதா கலாசாரம்’ 13வது இதழ் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயகவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப ஜனாதிபதி அவர்களும் நிலமேக்களும் குழு புகைப்படத்திற்கு தோற்றினர்.
அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, காமினி ஜயவிக்ரம பெரேரா, லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண ஆளுனர் பீ.பீ திஸாநாயக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக, முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.