நாட்டில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும் கடந்த கால அரசாங்கங்களின் கவனக் குறைவு காரணமாக வடமேல் மாகாணத்தை அண்மித்த பல பிரதேசங்களில் அத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படாமையினால் இப்பிரதேச மக்கள் பாரிய துயருக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.
விவசாயத்திற்கு மட்டுமன்றி சுத்தமான குடிநீர் வசதிகளற்ற காரணத்தினாலும் அம்மக்களின் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்திருந்ததுடன், சிறுநீரக நோய்க்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கின்றது.
இவ்வாறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்களின் நலன் கருதி இழுபரி நிலையில் இருந்துவந்த செயற்திட்டங்களை மீண்டும் செயற்படுத்தும் நடவடிக்கையானது மக்களின் இதயத் துடிப்பை அறிந்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண விவசாயிகள் பல வருடங்களாக தமது சிறுபோக, பெரும்போக பயிர்ச்செய்கைகளுக்குத் தேவையான நீர் இன்றி எதிர்நோக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தின் மற்றுமொரு பலனாகவே வயம்ப எல செயற்திட்டமும் ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய குளங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வாமெடில்ல மற்றும் தேவஹூவ ஆகிய பாரிய நீர்ப்பாசன திட்டங்களினூடாக நீர் வழங்குவதன் மூலம் குருணாகலை மாவட்டத்தின் வட பிராந்திய குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருடாந்தம் 105,000 ஏக்கர் அடி நீர்ப்பாசனத்திற்கான நீரை தொடர்ச்சியாக வழங்குதல், 353 சிறிய குளங்கள் மற்றும் 8 பிரதான குளங்கள் மகாவலி நீரால் பலன் அடைதல், 12,500 ஹெக்டெயர் விவசாய நிலத்தை அபிவிருத்தி செய்தல் ஆகியவை இச்செயற்திட்டத்தின் பலன்களாவதுடன், 13,500 குடும்பங்கள் இதன் மூலம் நன்மையடையும்.
மகாவலி நீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16,000 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் 50 சதவீத பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், வடமேல் மாகாணத்தின் கிழக்கு பிராந்தியத்திற்கு மகாவலி நீரை கொண்டு செல்வதற்கான இரண்டாம் கட்டம் இம்மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
தற்போது வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் நாலந்தா நீர்த்தேக்கத்தின் மேலதிக நீரை வினைத்திறனாக வேமெடில்ல திட்டத்திற்கும் வேவஹூவ நீர்த்தேக்கத்திற்கும் கொண்டு செல்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் நாலந்தா நீர்த்தேக்கத்தின் நீரையும் மகாவலி நீரையும் குருணாகலை மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் முதற் கட்டமாக மேற்கொள்ளப்படும்.
குருணாகலை மாவட்டத்திற்கு திசை திருப்பப்படும் நீர் பொல்பிட்டிகம, ஹெமட்டுவெவ, கல்கமுவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் உள்ள சிறிய குளங்களுக்கு நீரை தேவையான கால்வாய்களை நிர்மாணித்தல் மற்றும் தற்போது போவதென்ன நீர்த்தேக்கத்திலிருந்து தம்புலு ஓயாவிற்கு வழங்கப்படும் மகாவலி நீரை முதலாவது கட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள கால்வாயின் ஊடாக அனுப்புவதற்கு தேவையான கால்வாய் மார்க்கங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி இரண்டாம் கட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.
இதே நேரம் எல்லங்கா முறைமையின் ஊடாக அண்மித்த கிராமங்களில் உள்ள 2400 குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசன புரட்சியின் கீழ் வடமேல் மாகாணத்தில் 353 குளங்களின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் எஹெடுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் 91 குளங்களும், பொல்பிட்டிகம பிரதேச செயலாளர் பிரிவில் 119 குளங்களும், மஹவ பிரதேச செயலாளர் பிரிவில் 107 குளங்களும், கலேவெல பிரதேச செயலாளர் பிரிவில் 30 குளங்களும், பலாகல பிரதேச செயலாளர் பிரிவில் 01 குளமும், தம்புள்ள பிரதேச செயலாளர் பிரிவில் 05 குளங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
தாம் நீண்டகாலமாக முகங்கொடுத்து வந்த நீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்டுள்ள செயற்திட்டங்கள் மாகாண மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன.