பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைதல் என்பது நாட்டையும் நாட்டு மக்களையும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதாகும் என்பதுடன், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக அச்செயற்பாடுகளை நிறைவேற்ற அனைவரையும் ஒன்றிணையுமாறு சகல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், தனியார் துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட சகல துறை சார்ந்தோரையும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.
“பேண்தகு தொலைநோக்கினை அங்குரார்ப்பணம் செய்தல் மற்றும் பேண்தகு கருத்தாய்வு வரைவினை மக்களிடம் கையளிக்கும் வைபவம்” 06ம் திகதி பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த அழைப்பினை விடுத்தார்.
தேசிய பேண்தகு கருத்தாய்விற்காக வரைவு, தேசிய பேண்தகு அபிவிருத்தி பற்றிய நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்ஹவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய பேண்தகு கருத்தாய்வு சகல மக்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள செயற்திறனுடன் இயங்கி வருவதுடன், இது சகல மாகாணங்களிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது. வெகுசன ஊடகங்களினூடாக வெளியிடப்படும் மற்றும் வெளியிடப்படாத பிரச்சினைகளை இனங்காணவும் மக்கள் நேரடியாக குறித்த கருத்தாய்வில் பங்கெடுக்கவும் இதனூடாக வாய்ப்பளிக்கப்படுகின்றது.
இலங்கையரின் ஆற்றலை வெளிப்படுத்தி எதிர்வரும் 12 வருட காலத்திற்குள் நாட்டின் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் இலக்குகளை உறுதிசெய்வதற்காக திட்டமொன்றினை உருவாக்குதல் இதன் பிரதான நோக்கமாகும். இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் தொழிற்துறையினரை இந்த கருத்தாய்வில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. கருத்தாய்வின் பின்னர் பெறப்படும் பெறுபேறுகளைக் கொண்டு அவ் அறிக்கை மீண்டும் இற்றைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய பேண்தகு கருத்தாய்விற்கான இணையத்தளமும் ஜனாதிபதி அவர்களால் இதன்போது ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசி App ஊடாக தேசிய பேண்தகு கருத்தாய்வுடன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. www.nsd.lk என்ற இணைத்தளத்தின் ஊடாக தேசிய பேண்தகு கருத்தாய்வுடன் இணைந்து கொள்ள முடியும்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தேசிய பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வில் இரண்டு விசேட பிரேரணைகளை முன்வைத்தார். யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்கு நிலையான தீர்வினை கண்டறிதல் மற்றும் நாட்டின் உணவு உற்பத்தியின் 32 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் விலங்குகளினால் வீணடிக்கப்படுவதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளல் தொடர்பாக சகலரது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவ்விரு பிரேரணைகளாகும்.
இவ்விடயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளும் குற்றச்சாட்டுகளும் பல காலமாக முன்வைக்கப்பட்டு வருவதுடன், அரசாங்கங்களினால் காலத்திற்கு காலம் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை உரிய தீ்ர்வு எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், இவ்விடயம் தொடர்பில் தமது ஆலோசனைகளை அரசியல் கட்சி பேதமும் குறுகிய மனப்பான்மையும் இன்றி முன்வைக்குமாறு சகலருக்கும் அழைப்பு விடுத்ததுடன், தேவையாயின் தம்மை நேரடியாக சந்தித்து ஆலோசனைகளை கையளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் கலந்துரையாடல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்படும் என்பதுடன், விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் கையேற்றபோதிலும் தீர்வுகளும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்பே பெரிதும் அவசியமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதனிடையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசன திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவுள்ள 2,400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு தமது பங்களிப்பினை செய்வதற்கு தாய்நாட்டிற்கு வருகை தருமாறு வெளிநாட்டிலிருக்கும் சகல இலங்கை பொறியியலாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் பொறியியலாளர்களுக்கும் திறந்த அழைப்பு விடுத்த ஜனாதிபதி அவர்கள், நாட்டிற்கான தமது கடமைகளை நிறைவேற்ற மேலும் ஒரு சில வருடங்களுக்கேனும் தாய்நாட்டில் தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பாடசாலை மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சில மாணவர்களுக்கு பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வு வரைவினை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.
பேண்தகு அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன உள்ளிட்ட அதிதிகளும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் பேண்தகு அபிவிருத்தி பற்றிய நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்ஹ உள்ளி்ட்ட அதன் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.