இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் இதன்போது வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
26 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
2018 ஜூன் 05ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி அவர்களால் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் செயற்படுகின்றார்.
இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும் இரு மாகாணங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.
இந்த ஜனாதிபதி செயலணியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமைய அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும் கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதமும் அளவிலான குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மக்களுக்காக 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரு மாகாணங்களிலும் 1847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள், குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், விவசாயம், பொருளாதார நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக விரிவான வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதுடன், அம்பாறை சீனி தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசி தொழிற்சாலை மற்றும் நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் தாபித்தல் உள்ளிட்ட கைத்தொழில் துறை மறுமலர்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களினூடாக இவ்விரு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையிலும் துரித மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.
\