வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய செயற்படுத்தப்படும் விரிவான மக்கள் இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் “கிராமத்தை கட்டியெழுப்பும் பயணம்” செயற்திட்டத்தின் முதலாவது நிகழ்வு அண்மையில் புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்றது.
“கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்” செயற்திட்டத்தினூடாக கிராமிய மக்களின் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதுடன், மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளும் உள்ளடக்கப்படும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் ஓர் இடத்திற்கு அழைக்கப்பட்டு அவர்களது அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களிடம் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புத்தளம் மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற நிகழ்வின் போது முன்வைக்கப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு துரித தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் சிறுநீரக நோய் நிவாரண தேசிய செயற்திட்டத்தின் நெறிப்படுத்தலில் புத்தளம் நவகத்தேகம, ஆனமடுவ மற்றும் தங்கொடுவ பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
குறித்த நீர் சுத்திகரிப்பு தொகுதிகளை ஜனாதிபதி அவர்கள் தொலைதூர தொழிநுட்ப முறையினால் ஜனாதிபதி செயலகத்திலிருந்து இன்று (24) பிற்பகல் திறந்து வைத்தார்.
அதனை நிகழ்வு நடந்த தளத்திலிருக்கும் மக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததுடன், அங்கு பல அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கூடியிருந்து தமது பங்களிப்பினை வழங்கினர்.
நவகத்தேகம ஆரம்ப பாடசாலை, ஆனமடுவ மத்திய மகா வித்தியாலயம் மற்றும் தங்கொடுவ, மெடிகொடுவ, நெலும் உயன பிரதேச சபைக்குரிய பூங்காக்களில் இந்த நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3,000 பயனாளிகள் தினமும் 10,000 லீற்றர் வீதம் இதனூடாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சிறுநீரக நோயை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்காக கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்கும் நோக்கில் நாடு பூராகவும் உள்ள 1,092,500 பயனாளிகளுக்காக 675 மில்லியன் ரூபா செலவில் 450 நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் இதுவரை நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் செயற்திட்ட பணிப்பாளர் அசேல இத்தவெலவும் கலந்துகொண்டார்.