பண்டைய மன்னர் காலந்தொட்டு எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயத்துறையே பலப்படுத்தி வந்துள்ளது. இன்று மட்டுமன்றி எதிர்காலத்திலும் கூட பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடிப்படைக் காரணி அதுவே ஆகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் விவசாயத்துறையை பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் புதிய அத்தியாயமாக மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி செயற்திட்டம் அமைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுவரும் களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பும் விழா மற்றும் தெற்காசியாவிலேயே மிக நீளமான சுரங்கக் கால்வாயான மேல் எலஹெர கால்வாயின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் 23ம் திகதி முற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
660,000 ஏக்கர் அடி கொள்ளளவுடைய இந்த நீர்த்தேக்கத் திட்டத்திற்கான மொத்த முதலீடு ரூபா 23,000 கோடிகளாகும்.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், விவசாயிகளின் துயர் துடைக்கும் பாரிய நீர்ப்பாசன திட்டமாக அமைந்துள்ள மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திலும் தேசத்தின் எதிர்காலத்திலும் புதியதோர் அத்தியாயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.
இச்செயற்திட்டத்தின் கீழ் 2400 குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதுடன், மன்னராட்சி காலத்தின் பின்னர் தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் விவசாய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி செயற்திட்டம் இதுவேயாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ரஜரட்டை மக்களின் துயர் துடைக்கும் இந்த பாரிய செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த இன்று அதனை நடைமுறைப்படுத்துவதில் பங்களிப்பு வழங்கியதாக தெரிவிக்கும் எவருக்கும் அன்று அதனை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படவில்லை என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 2007 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்திற்கு 05 வருட காலமாக நிதி ஒதுக்கீடு செய்யாததுடன், வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்வதற்காக நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆவணங்களில் பெயரை உள்ளடக்குவதற்கு கூட அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனையும் இதன்போது நினைவுகூர்ந்தார். முடியுமாயின் அவர்களால் அதற்கான அறிக்கைகளை முன்வைக்குமாறும் தெரிவித்தார்.
தமது 27 வருட கனவை நனவாக்கிய மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் விநியோகிக்கப்பட்ட தினமே தமது வாழ்வில் தான் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகிய தினமாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இலஞ்ச, ஊழல், முறைக்கேடுகள் எதுவுமின்றி இந்த செயற்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுதல் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த பாரிய செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் தரம் மற்றும் நியமங்கள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமாயின் அல்லது இலஞ்ச, ஊழல், முறைக்கேடுகள் இடம்பெற்றதாக உறுதி செய்யக்கூடிய தகவல்கள் கிடைப்பின் தனிப்பட்ட ரீதியில் தம்மிடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
அதன்பொருட்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களுடன் கூடிய விசேட பிரிவொன்றினை எதிர்வரும் வாரத்திலிருந்து அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனூடாக சகல முறைப்பாடுகளையும் தம்மிடம் நேரடியாக சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்ததுடன், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் அல்லது ஒப்பந்த நிறுவனம் ஏதேனும் ஊழல், மோசடி நடவடிக்கையுடன் தொடர்புபட்டிருப்பதாக உறுதி செய்யப்படின் அவர்களுக்கு ஒருபோதும் தான் மன்னிப்பு அளிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில் தும்பர பள்ளத்தாக்கில் நக்கிள்ஸ் மலையடிவாரத்தின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை லக்கல பல்லேகம பிரதேசத்தில் இடைமறித்து களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 248 மில்லியன் கன மீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். இந்நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டு 618 மீற்றர் நீளமும் 68 மீற்றர் உயரமும் உடையது. அணைக்கட்டின் உச்சியின் அகலம் 08 மீற்றர்களாகும். இந் நீர்த்தேக்கத்திற்கு வலது புறமாக அமைக்கப்படும் கருங்கல் அணைக்கட்டு 28 மீற்றர் உயரமானது. 14.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடைய இந் நீர்த்தேக்கத்தினால் 128 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு போஷிக்கப்படுகின்றது.
இந் நீர்த்தேக்கத்தின் மங்கள நீர் நிரப்பல் விழா மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் லக்கல களுகங்கை அணைக்கட்டிற்கு முன்னால் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
27 வருடங்களாக ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கண்ட கனவை நனவாக்கிய முதலாவது நீர்த்தேக்கமான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு ஒரு புறத்தில் கருங்கல்லினால் வடிக்கப்பட்ட 27 அடி உயரமான புத்த பெருமானின் திருவுருவச்சிலை ஜனாதிபதி அவர்களால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் புத்த பெருமானின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி அவர்கள், மலர் தூவி வழிபாடுகளில் ஈடுபட்டார்.
வண. அலியாவலே விபுலசார தேரரிடம் குறித்த புத்த பெருமானின் திருவுருவச் சிலை ஜனாதிபதி அவர்களால் பொறுப்பிக்கப்பட்டது.
மொரகஹகந்த களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
தெற்காசியாவிலேயே மிக நீளமான சுரங்கக் கால்வாயான மேல் எலஹெர சுரங்க மார்க்கத்தையும் ஜனாதிபதி அவர்கள் இன்று பார்வையிட்டார். 96 கிலோமீற்றர் நீளமான இந்த கால்வாயின் நிர்மாணப் பணிகளுக்காக ரூபா 6700 கோடி செலவிடப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை குலசிங்க நீர்த்தேக்கம் எனப் பெயரிடும் விசேட நிகழ்வும் இன்று இடம்பெற்றது. கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்க எமது நாட்டின் பிரசித்திபெற்ற பொறியியலாளர் என்பதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நிர்மாணிப்பு தொடர்பாக ஆரம்பகட்ட அவதானிப்புகளை அவருடன் இணைந்தே மேற்கொண்டார். மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு நிர்மாணிக்கப்பட வேண்டிய இடமும் இதன்போதே இனங்காணப்பட்டது.
எமது நாட்டிற்கே உரித்தான புதிய தொழில்நுட்ப நிர்மாணிப்புகள் பலவற்றை நிர்மாணித்த பொறியியலாளர் கலாநிதி ஏ.என்.எஸ்.குலசிங்கவை நினைவுகூரும் முகமாகவே இந் நீர்த்தேக்கம் குலசிங்க நீர்த்தேக்கம் என பெயரிடப்பட்டுள்ளது.
“மகாவலி செயற்பணிகள்” சஞ்சிகையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜோன் அமரதுங்க, மஹிந்த சமரசிங்க, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகளும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.