ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் 18ம் திகதி ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
திறந்த அரசாங்க பங்குடமையானது (OGP) பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். ஜோர்ஜியாவின் பிரதமர் Mamuka Bakhtadze அவர்களின் தலைமையில் இன்று முற்பகல் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
திறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானது. அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
திறந்த அரசாங்க பங்குடமையுடன் தொடர்புடைய கொள்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லையற்ற அதிகாரம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்தது என்றும் தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லையற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் அன்று பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தான் நாட்டை பொறுப்பேற்கின்றபோது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென்று தெரிவித்தார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை முடியுமானளவு குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஊடாக அது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவூட்டவும் ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவது தொடர்பாக சிவில் சமூகத்திடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.
திறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும். தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.
ஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படுகின்றது. இம்மாநாடு நாளை நிறைவடையும்.
திறந்த அரசாங்கப் பங்குடமையின் (OGP) தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் – 2018.07.18, திபிலிசி நகரம், ஜோர்ஜியா
இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடையும் அதேவேளை உங்களது வினா தொடர்பிலும் நன்றி தெரிவிக்கின்றேன். ஊழல் மற்றும் வீண்விரயம் தொடர்பாக திறந்த அரசாங்கப் பங்குடமை முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றது. ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை முற்றாக இல்லாதொழிக்க அதிகாரத்திற்கும் ஊழலுக்கும் இடையிலான தொடர்பினை துண்டித்தல் இன்றியமையாததாகும். அதிகாரமும் ஊழலும் ஒன்றாகவே பயணிக்கின்றன. பிரதானமாக அரசியல் துறை சார்ந்தோரிடமும் அரச அதிகாரிகளிடமும் காணப்படும் தனிப்பட்ட அதிகாரங்களை இயன்றளவில் குறைத்து அவற்றை பங்குடமை அமைப்புக்களிடம் கையளித்தல் அரசியலமைப்பு ரீதியில் மிகுந்த முக்கியத்துவமுடையதாகும்.
நான் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உலகிலுள்ள எந்தவொரு அரச தலைவர்களுக்கும் காணப்படாத வகையில் வரையறையற்ற நிறைவேற்று அதிகாரங்களே இலங்கையின் அரச தலைவருக்கு காணப்பட்டது. அந்த வரையறையற்ற நிறைவேற்று அதிகாரத்துடனேயே ஊழல் பயணித்துக் கொண்டிருந்தது.
ஆகையினால் நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் வசமிருந்த வரையறையற்ற நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். அதனூடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் பலமடைந்தது. நான் அந்த அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே இலங்கையில் பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டார். உயர் நீதிமன்ற நீதியரசர், சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். பல்வேறு விடயங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களும் ஆணைக்குழுக்களும் சுயாதீன ஆணைக்குழுக்களாக குறிப்பிடப்பட்ட போதிலும் அவற்றிற்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி என்ற வகையில் என் வசமிருந்த வரையறையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் கையளித்தேன். அதன் காரணமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் எழுச்சி பெற்றன.
இன்று இலங்கையின் நீதிமன்றம், இலஞ்ச ஊழல் விசாரணை, அரச நிர்வாகம், கணக்காய்வு மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட சகல விடயங்களுடனும் தொடர்பான சுயாதீன ஆணைக்குழுக்களின் ஆணையாளர்களும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் அரசியலமைப்பு சபையினாலேயே நியமிக்கப்படுகின்றனர். அதனூடாக சகல ஆணைக்குழுக்களும் சுயாதீனமாக செயற்படுகின்றன. எனது நாட்டில் நீதிமன்றங்கள் அரசியல் தலையீடுகளினால் பாரதூரமாக பாதிக்கப்பட்டிருந்தது. பண்புத்தரத்திலும் நியமங்களிலும் வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் இன்று நீதிமன்றங்கள் எந்தவொரு அரசியல்வாதியும் தலையீடு செய்ய முடியாத வகையில் பலமடைந்துள்ளன. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் சுயாதீன ஆணைக்குழு பலப்படுத்தப்பட்டு, அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தலையீடு செய்ய முடியாதவாறு பலப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சகல நிறுவனங்களும் இந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பக்கச்சார்பற்று செயற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் மாநாடுகள், செயலமர்வுகள், கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பாக சாதாரண பொதுமக்கள் தமது அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தெளிவுபடுத்தப்படுவதுடன், முறைப்பாடுகளை மேற்கொள்ளல், அவற்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் ஊடகங்களின் ஊடாக மக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றனர்.