திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஜோர்ஜிய ஜனாதிபதி Giorgi Margvelashvili அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு 18ம் திகதி இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது இருநாட்டு அரச தலைவர்களும் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை புதிய வழிமுறைகள் ஊடாக வலுப்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கான பணிப்புரைகளை அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
சுமார் 4.7 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஜோர்ஜியாவின் பிரதான வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயமாகும். அண்மைக்காலமாக சுற்றுலாத்துறையும் அந்நாட்டு பொருளாதாரத்திற்கு வலுச்சேர்த்து வருகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான விவசாய மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
இலங்கையைச் சேர்ந்த பல மாணவர்கள் ஜோர்ஜியாவில் கல்வி கற்று வருவதுடன், அவர்களின் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையுடனான உறவுகளை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கு ஜோர்ஜியா விரும்புவதாக ஜோர்ஜிய ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜோர்ஜிய ஜனாதிபதியால் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கை தூதுவக் குழுவினர் கலந்துகொண்டனர்.