6வது உலக வனப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இடம்பெறும் உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி அவர்கள், அந்தப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று (17) அதிகாலை ஜோர்ஜியாவின் ஷோட்டா ரஸ்ட்டாவெளி திபிலிசி (Shota Rustaveli Tbilisi) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜோர்ஜ் சர்வாசிட்சே George Sharvashidze) உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
திறந்த அரசாங்க பங்குடமை மாநாடு நாளை (18) முற்பகல் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவர்கள், திறந்த பங்குடமை நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இலங்கை இதுவரையில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கவுள்ளார்.
திறந்த அரசாங்க பங்குடமையானது பிரஜைகளுக்காக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும்.
திறந்த அரசாங்க பங்குடமை 2011ஆம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் முறையாக தாபிக்கப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லாட்சி நிகழ்ச்சித்திட்டத்தை பாராட்டி அப்பங்குடமையில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் 2015ஆம் ஆண்டு இலங்கையும் அதில் இணைந்துகொண்டது. இலங்கை இவ்வமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடாகும்.
தற்போது உலகில் 75 நாடுகள் திறந்த அரசாங்க பங்குடமையில் உறுப்புரிமை பெற்றுள்ளன.
ஊழல் ஒழிப்பு, சிவில் சமூக ஈடுபாட்டை அதிகரித்து மற்றும் அரச சேவையை பலப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்துகொள்வதில் உள்ள சவால்கள் மற்றும் அச்சவால்களை வெற்றிகொள்வதற்கு பூகோள ரீதியாக கூட்டாக எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் சந்திப்பின்போது விரிவாக கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஜனாதிபதி அவர்களுடன் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோரும் இணைந்துகொண்டுள்ளனர்.