தேசிய பொருளாதார சபை 10ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஒன்று கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் அந்நிய செலாவணியினை அதிகரிப்பதற்காக ஏற்றுமதிகளை அதிகரித்தல் மற்றும் இறக்குமதிகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக வரிக் கொள்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் ஏற்றுமதியினை அதிகரிப்பதற்காக சலுகைகளை பெற்றுக்கொடுக்கவும் வர்த்தகர்களுக்கு ஊக்கமளிக்கும் வரிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் அந்நிய செலாவணி குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கி வருகின்றது. வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும்போது வரி மற்றும் கட்டணங்கள் இன்றி அப்பணத்தினை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கவும் இதன்போது ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், அதனூடாக அந்நிய செலாவணியினை அதிகரிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு கொண்டு வரப்படும் எரிபொருளை கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரை கொண்டு செல்வதற்காக நிர்மாணிக்கப்படும் 12 அங்குல விட்டமுடைய புதிய குழாய் மார்க்கத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், அக்குழாயினை பதிக்கும் நடவடிக்கையில் மாவத்தை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையினை தீர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சினால் ஜப்பானிய நிதியுதவியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள 2030 ஆண்டு வரையான மின்வலுத்திட்டம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமாவினால் (Kenichi Suganuma) இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜயிக்கா நிறுவனத்தின் விசேட பிரதிநிதி புசாட்டோ டனக்காவும் (Fusato Tanaka) இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.
அமைச்சர்களான மங்கள சமரவீர, மஹிந்த சமரசிங்க, அர்ஜூன ரணதுங்க, ரஞ்சித் சியம்பளாபிட்டிய, கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.