விவசாயிகளின் நீண்ட கால நீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் அவர்களது பல பிரச்சினைகளை தீர்க்கவும் கடந்த மூன்றரை வருட காலமாக அரசாங்கம் முறையாக திட்டமிட்டு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
வெலிகந்த புதிய கமநல சேவைகள் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் 09ம் திகதி பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனை தெரிவித்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இன்று எமது நாட்டில் விவசாய மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களும் கஷ்டங்களும் அவர்களது எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கப்படாதிருக்க விவசாய பொருளாதாரத்தையும் விவசாயிகளின் வாழக்கையையும் சுபீட்சமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனத் தெரிவித்தார்.
அவ்வாறே வெலிகந்த பிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், வெலிகந்த பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கியிருக்கும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட வெலிகந்த குடிநீர் செயற்திட்டத்தின் நடவடிக்கைகளை அடுத்த வருட முற்பகுதியில் நிறைவு செய்ய முடியும் என குறிப்பிட்டார்.
சிலர் அபிவிருத்தி செயற்திட்டங்களினால் குறுகிய தீர்வுகளை எதிர்நோக்கிய போதிலும் தற்போது அபிவிருத்தி செயற்திட்டங்கள் முறையான திட்டமிடலுடனும், எதிர்கால குறிக்கோளுடனுமே நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில ஊடகங்கள் குறிப்பிடுவதைப்போல நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்படவில்லை எனவும், அரசாங்கம் என்ற வகையில் பாரிய செயற்திட்டங்களை நிறைவேற்றி வருவதுடன், எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டிற்கும் மக்களுக்குமான பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றுவோம் எனவும் வலியுறுத்தினார்.
”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கமநல சேவைகள் நிலையம் ஒரு கோடியே 31 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கமநல சேவைகள் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், அதனை பார்வையிட்டார்.
கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் இதன்போது ஜனாதிபதி அவர்கள் மரக்கன்று ஒன்றினையும் நட்டினார்.
விவசாய கமநல காப்புறுதி சபையினால் வழங்கப்படும் பயிர்ச்செய்கை நட்ட ஈட்டிற்கான காசோலைகளும் கமநல வங்கியினால் வழங்கப்படும் செயற்திட்ட கடன்களுக்குரிய காசோலைகளும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், விவசாய உபகரண தொகுதிகளும் இதன்போது வழங்கப்பட்டன.
அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், விவசாய அமைச்சின் செயலாளர் பீ.விஜேரத்ன, கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.பீ.வீரசேகர, பொலன்னறுவை மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் பீ.எம்.சீ.எச்.குமாரிஹாமி உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.