கேகாலை மாவட்டத்தில் மாவனல்ல, அரநாயக்க மற்றும் றம்புக்கண ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25000 குடும்பங்களுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டத்திற்காக நெதர்லாந்து அரசாங்கத்திடமிருந்து 85 மில்லியன் யூறோ கடனாகக் கிடைத்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்ர் மங்கள சமரவீர தலைமையில் நேற்றைய 03ம் திகதி அமைச்சில் இடம்பெற்றது.
இப்பிரதேசத்தில் வசிப்பவர்களில் 70% நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதுடன், வறட்சிக் காலத்தில் நீர்த்தோற்றுவாய்கள் வற்றிப்போவதால் பலத்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இத்திட்டத்தின் ஊடாக 62 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் ஆறு இலட்சம் பேர் நன்மையடைவர்.
உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில் நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷீம், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜுவென் டோர்னிவற் ஆகியோர் கலந்துகொண்டனர்.