29ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலைஞர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக தொழிற்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள சில வரிகளின் காரணமாக இத்துறையில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கலைஞர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார்கள்.
நாட்டிலுள்ள திரையரங்குகளை நவீன மயப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கொழும்புக்கு வெளியே வசதிகளுடன் கூடிய திரையரங்குகள் இல்லாத காரணத்தால் தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி பிரதான நகரங்களில் வசதிகளுடன் கூடிய ஒரு திரையரங்கையேனும் நிர்மாணிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களின் காரணமாக தேசிய தொலைக்காட்சி நாடக துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கு விதிக்கப்படும் வரிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக கலையை மேம்படுத்துவதற்கு புதிய நிதியமொன்றை தாபிப்பதற்கும் முன்மொழியப்பட்டது.
அதேநேரம் தொலைக்காட்சி நாடகங்களை தரப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி நிறுவன சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள வரைபை நடனக் கலைஞர் தீபானி சில்வா ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி வைத்தார்.
அமைச்சர்களான விஜேயதாஸ ராஜபக்ஷ, பைஷர் முஸ்தபா மற்றும் நிதியமைச்சின் செயலாளர், கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
உயர் தரத்துடன் கூடிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக தயாரிப்பு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி
