சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி Matthew Morel உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு 19ம் திகதி முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிராந்திய நாடுகள் எதிர்நோக்கியுள்ள காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் தேசிய நுகர்வுக்கான நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கை நெல் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அறுவடைக்குப் பின்னரான சேதங்களை குறைப்பதற்குமான நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க கமநல சேவைகள் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக தெரிவித்த பணிப்பாளர் நாயகம், நெல் உற்பத்திகளின் பெறுமதிசேர் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், கடந்த காலத்தில் எதிர்நோக்க நேர்ந்த காலநிலை மாற்றங்களால் நாட்டின் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதே தமது நோக்கமெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவையும் அனுபவங்களையும் ஏனைய வலய நாடுகளுடன் பரிமாறிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நாயகத்தின் வருகைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் நாட்களில் பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.