“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் அதற்கான முதற்படியாக அமைவதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளையும் அபிவிருத்தி செய்து அதனூடாக பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு 18ம் திகதி முற்பகல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தேசத்தின் உயிர் நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உள, உடல் விருத்திக்கு சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலகத்தினால் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சமூகத்தில் தற்போது பரவியுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வரலாற்றில் முதற் தடவையாக 14 அமைச்சுக்கள், 05 திணைக்களங்கள், 06 நிறுவனங்கள், 09 மாகாண சபைகள் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமாக இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், 2017 முதல் 2019 வரையான மூன்று வருடகால திட்டத்திற்காக 5232.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தன்னார்வ சிறுவர் இல்லங்களின் தரக் கட்டுப்பாடு, மேற்பார்வை, நிர்வாகம் தொடர்பான பிரகடனங்களை உருவாக்குதல், சிறுவர் தடுப்பு நிலையங்களை பாதுகாப்பு இல்லங்களாக பெயர்மாற்றுதல், சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தத்தெடுத்து வளர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துதல், விடுதிகள், மருந்துச்சாலைகள் பதிவு மற்றும் அவற்றினை மேற்பார்வையை வினைத்திறனாக்குதல் போன்ற செயற்பாடுகளை “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் காரணமாக தடுப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு உள்ளீர்த்தல் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களை வலுப்படுத்துதல் இச்செயற்திட்டத்தின் விசேட குறிக்கோளாகும்.
“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் தாயை இழந்த 387 பிள்ளைகளும் தந்தையை இழந்த 378 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடைய சிறுவயது தாய்மாரும் இடம்பெயர்ந்த சிறுவர்களும் பல்வேறு குறைபாடுகளுடனேயே சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அதற்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர் இல்லங்களையும் தடுப்பு இல்லங்களையும் நவீனமயப்படுத்தி புனரமைப்பு செய்வதற்கு நிதி வழங்குதல், விசேட தேவையுடைய பிள்ளைகள் கல்விகற்கும் வடமாகாணத்தில் உள்ள 25 பாடசாலைகளுக்கு பாதை வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வழங்குதல். சிறுநீரக நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக சுத்தமான குடிநீர் வசதியற்ற 1000 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்குதல், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கு புத்தக பொதிகள், மரத் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சிறுவர்களுக்காக இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சகல செயற்திட்டங்களில் இருந்தும் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் முக்கியத்துவமுடையதாக காணப்படுவதற்கு அது நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகவும் நடைமுறைக்கேற்ற வகையிலும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்தப்படுவதே காரணமாகுமெனத் தெரிவித்தார்.
உள வள ஆலோசனை, சட்ட ஆலோசனை மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை என்பனவும் இன்றைய தினம் வைபவ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் சீ.வி. விக்கேனஸ்வரன், அமைச்சர் சந்ராணி பண்டார, பிரதி அமைச்சர்கள் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகள் பலரும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
இதனிடையே “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்துடன் இணைந்ததாக கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானத்தையும் ஜனாதிபதி அவர்கள் இன்று மாணவர்களிடம் கையளித்தார்.

2017 ஒக்டோபர் 14 ஆம் திகதி கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் அப்பாடசாலை மாணவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்திற்கான மொத்த செலவு 05 மில்லியன் ரூபாய்களாகும்.
இன்று முற்பகல் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், விசேட நினைவுப் பரிசொன்றும் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினரின் உபயோகத்தில் இருந்துவந்த 120.89 ஏக்கர் காணியை மீண்டும் மக்களிடம் கையளித்தலும் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாட்டில் இடம்பெற்றது.
அதற்கான ஆவணங்களை ஜனாதிபதி அவர்கள் குறித்த மாவட்ட செயலாளர்களிடம் கையளித்ததுடன், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 62.95 ஏக்கர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 05.94 ஏக்கர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஏக்கர்களும் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாட்டில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் – 2018.06.18
“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அநேகமான நிகழ்வுகளில் ஜனாதிபதியின் உரை இறுதியாகவே அமையும். ஆயினும் இன்று நான் முதலாவதாக உரையாற்றப் போகின்றேன். ஏனெனில் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் பிரதான பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் எனப்படுபவர் யார்? எமது பெற்றோர் எம்மை பிள்ளை என்றே அழைக்கின்றனர். அப்படியாயின் நாம் அனைவரும் பிள்ளைகளே. ஆயினும் இந்த “சிறுவர்களைப் பாதுகாப்போம்” செயற்திட்டம் 18 வயதிற்குபட்டவர்கள் அனைவரையும் நோக்காகக் கொண்டு இந்த செயற்திட்டம் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்மை விசேட அம்சமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சிறுவர் தினத்தை பெயரிட்டுள்ளது என்தை நீங்கள் அறிவீர்கள். அத்தினத்தில் சகல நாடுகளும் சிறுவர்களுக்கு முன்னுரிமையளித்து சிறுவர்களுக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றன. முதலில் நாம் இத்தகைய செயற்திட்டம் ஒன்றை ஏன் ஆரம்பித்தோம் என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்துதல் முக்கியமாகும். இன்று சிறுவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. எமது நாட்டில் மட்டுமன்றி பல உலக நாடுகளிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஆயினும் பொருளாதார ரீதியில் குறைந்த மட்டத்தில் உள்ள, குறைந்த அபிவிருத்தியுடைய நாடுகளில் இப்பிரச்சினைகள் அதிகமாகும். அதேபோன்று உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெறும், இடம்பெற்ற நாடுகளிலும் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகும். தெற்காசிய நாடுகளை சேர்ந்த பிள்ளைகளே இவ்வாறான அதிக பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
சிறுவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் முதலாவது இடம் அவர்களது வீடாகும். பெற்றோரின் பராமரிப்பிலேயே பிள்ளைகள் வளர்கின்றனர் ஆயினும் குடும்ப பொருளாதார பிரச்சினைகளினால் சிறுவர்கள் அழுத்தத்திற்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. சிலவேளைகளில் பெற்றோர் போதைபொருட்களை உபயோகித்ததன் பின்னர் வீட்டில் பிள்ளைகளை துன்புறுத்துகின்றனர். புரிந்துணர்வு குறைந்த பெற்றோர் தம் பிள்ளைகள் தாம் கூறுவதை கேட்பதில்லை என அவர்களை துன்புறுத்துகின்றனர். மிகுந்த வேதனைக்குரிய விடயமாக பெற்றோரே தமது பிள்ளைகளை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அமைகின்றன. இவ்வாறான செய்திகளை நாம் ஊடகங்களில் காண்கின்றோம். முறையற்ற ஒழுங்கீனமான சமூகத்திலேயே அவை காணப்படலாம். சிறந்த ஒழுக்கமான சமூகத்தில் அவற்றை எவ்வகையிலும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமது வீடுகளில் பெற்றோர்களிடமே பிள்ளைகள் அழுத்தங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முதலில் உள்ளாகுகின்றனர் என்பதை குறிப்பிட வேண்டும். பெற்றோரின் புரிந்துணர்வற்ற தன்மை, போதிய கல்வியறிவு இல்லாமை, போதைப்பொருள் பாவனை என்பனவே அதற்கு காரணமாகும். எனவே இல்லங்களை பிள்ளைகளுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் பிரச்சினைகள் எழுகின்றன. பாடசாலையில் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளின் போதும் அவர்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சிலவேளைகளில் கல்வியறிவுடைய ஆசிரியர்களினாலும் பிள்ளைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக நேரிடுகின்றது. பிள்ளைகள் புரியும் சாதாரண குற்றங்களுக்கு ஆசிரியர்களால் வழங்கப்படும் நியாயமான தண்டனைகளை நான் குறிப்பிடவில்லை. பாடசாலைகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால் வீடுகளில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளே இருக்கின்றனர். ஆனால் தாய், தந்தையர் அவர்களை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்கள் அறிவார்கள். ஆகவே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பிள்ளைகள் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எனது கருத்துப்படி பாடசாலையில் ஒழுக்கத்தை பேணுவதற்காக, குற்றங்கள் இழைக்கப்படும்போது மாணவர்களுக்கு சிறிய தண்டனைகள், எச்சரிக்கைகள் வழங்குதல் தவறல்ல.
பெற்றோர்களைப் போன்றே ஆசிரியர்களாலும் பாரதூரமான தண்டனைகள் வழங்கப்படும், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களை எம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிலவேளைகளில் ஒரே குடும்பத்தில் உள்ள தமது பிள்ளைகளை வெவ்வேறு விதமாக கவனிக்கும் பெற்றோர் இருக்கின்றனர். அவ்வாறே பாடசாலைகளிலும் சில ஆசிரியர்கள் சிலருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகின்றனர். சில மாணவர்களை மிகுந்த அக்கறையுடன் கவனிக்கின்றனர். இன்னும் சிலரை கண்டுகொள்வதே இல்லை. சிலரை ஒதுக்கி வைக்கின்றனர். வகுப்பில் அதிக புள்ளிகளைப் பெறும் மாணவர்களைப் போன்றே மிகக் குறைந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் தொடர்பிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி சகலரையும் ஒன்றுபோல் கவனிக்க வேண்டும்.
சிறந்த புள்ளிகளைப் பெறும் பிள்ளைகளைப் போன்றே கல்வி செயற்பாடுகளில் குறைந்த அவதானமுடைய மாணவர்கள் தொடர்பாகவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் பிள்ளைகள் பாடசாலைகளில் இருந்து வெளியேறியதன் பின்னர் சமூகத்தில் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாகவும் நீங்கள் அறிவீர்கள். பொது போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்யும்போது பிள்ளைகள் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுகின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகையால் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே பெற்றோர் வெளிநாடு செல்வதினாலும் பல பிரச்சினைகளை பிள்ளைகள் எதிர்நோக்க நேரிடுகின்றது. சில பெற்றோர் தமது பிள்ளைகளை கைவிட்டு விட்டு செல்கின்றனர். சில தாய்மார் குழந்தை கிடைத்த உடனேயே அவர்களை திருட்டுத்தனமாக பாதைகளில் வீசுகின்றனர். இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளை பிள்ளைகள் எதிர்நோக்குகின்றனர்.
எமது நாட்டிலும் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றது. யுத்தம் இடம்பெறும் எந்தவொரு நாட்டிலும் பிள்ளைகள் தீவிர மன அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும். யுத்த சூழ்நிலைகளில் சிறுவர்களே அதிகளவு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இதன்போது சிலர் பெற்றோரை இழக்கின்றனர். அவர்களை கவனிக்க யாருமற்ற சூழல் ஏற்படுகின்றது. இத்தகைய மிகுந்த வேதனையான துயர அனுபவங்கள் நம் அனைவருக்கும் உண்டு. பொலிஸ் திணைக்களம், நன்நடத்தை திணைக்களம் என்பவற்றிற்கு பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகளும் முறையீடுகளும் இதன் காரணமாகவே செய்யப்படுகின்றன. எமது சமூகத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் செயற்படுத்தப்பட வேண்டிய விசேட செயற்திட்டங்களுக்கான தேவை குறித்து நாம் அறிவோம். அதுபோலவே நோய்களால் பீடிக்கப்பட்ட பிள்ளைகள் இருக்கின்றனர். ஆகையினால் இவ்வனைத்து விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தியே “பிள்ளைகளைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
எமது இந்த செயற்திட்டத்துடன் அமைச்சுக்கள், மாகாண சபைகள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற சகல துறைகளையும் நாம் இணைத்துக்கொண்டுள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை சிறுவர்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. அந்த பிரகடனத்திற்கமைய நாம் அனைவரும் செயற்பட வேண்டும். அதனால் பிள்ளைகளின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புடைய அரசாங்கம் என்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பதற்காக சட்டங்கள் காணப்படுகின்றன. ஆயினும் பிள்ளைகள் பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றனர்.
இதனாலேயே இந்த சகல துறைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி இந்த தேசிய செயற்திட்டத்தை நாம் தயாரித்தோம். இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வழங்குதலாகும். சகல பிள்ளைகளினதும் கல்வி, சுகாதாரம், பொறுப்பு, பாதுகாப்பு போன்ற சகல விடயங்களும் இச்செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் இந்த செயற்திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல நிறுவனங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். சுகாதார சேவைகள், மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சு, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை நாம் அனைவரும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் பாதுக்காப்பிற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி