1981 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒம்புட்ஸ்மன் அலுவலகம் கடந்த 37 வருடங்களாக பொது மக்களுக்கு சேவையாற்றி வருகின்ற போதிலும் அந்த அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளமும் இதுவரை இருக்கவில்லை.

அக்குறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போதைய நிர்வாக செயற்பாடுகளுக்கான பாராளுமன்ற ஆணையாளராக கடமையாற்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி எல்.ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்க அவர்களின் வழிகாட்டலில் இந்த உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 2016 ஆம் ஆண்டில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடாக விளம்பரம் செய்து, நாடளாவிய ரீதியில் பாடசாலை ஓவியப் போட்டியொன்றினை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளை சார்ந்த 10, 11ஆம் தரங்களை சார்ந்த மாணவர்களால் தபால் மூலமாக அனுப்பப்பட்ட 116 ஓவியங்களுள் கல்வி அமைச்சின் சித்திரப் பிரிவின் பிரபல நடுவர் சபையினால் ஆராயப்பட்டு உத்தியோகபூர்வ இலச்சினைக்கான ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டது. குளியாப்பிட்டிய சுரதூத்த மகளிர் மகா வித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்ற கயத்ரி பபோத பெரேரா என்ற மாணவியினால் சமர்ப்பிக்கப்பட்ட ஓவியமே இதன்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தியோகபூர்வ இலச்சினையும் இணையத்தளத்தின் அங்குரார்ப்பணமும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்பட்டதுடன், ஓவியப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ மாணவியர்களுக்கான சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

உத்தியோகபூர்வ இலச்சினை மற்றும் இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு சம காலத்தில் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த சஞ்சிகையும் ஒம்புட்ஸ்மன் எல். ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் தலதா அத்துகோரல, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.