மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் ஊவா மாகாண முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று (21) முற்பகல் பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் இதில் கலந்துகொண்டதுடன், ஊவா மாகாண மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இந்த பிரச்சினைகளை செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், சில பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாவட்டத்தில் வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவில் கொஸ்கனுவெல கிராம சேவகர் பிரிவில் மூடப்பட்டுள்ள பேக் தொழிற்சாலையை கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் கீழ் உடனடியாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்தார்.
மேலும் மொனராகலை மாவட்டத்தில் விவசாய துறையை முன்னேற்றுவதற்கு தேவையான நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அரசாங்க அதிகாரிகளின் விசேட கவனத்திற்கு கொண்டு வந்தார்.
தற்போது நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு பின்னர் போதுமான மழை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், இந்த மழை நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து எதிர்வரும் காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட பொருளாதார முறைமையொன்றின் கீழேயே எமது நாடு பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் முக்கிய செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராம சக்தி மக்கள் இயக்கத்தை வெற்றிபெறச் செய்து வளமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சி பேதமின்றி பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அனைத்து பிரதேச அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொண்டார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி மாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அவர்கள் இந்த புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து பாராட்டு தெரிவித்தனர். இதன் வெற்றிக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
ஊவா மாகாண கிராம சக்தி மலர் சங்கத்திற்கும் ஹேலிஸ் தனியார் நிறுவனத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. மலர்களை பயிரிடுவோரிடமிருந்து குறித்த விலையில் மலர்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான நவீன தொழில்நுட்ப உதவிகளையும் உபகரணங்களையும் உற்பத்தியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இந்த உடன்படிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
தேசிய, சர்வதேச சந்தையை இலக்காகக்கொண்டு வரையறுக்கப்பட்ட ஹேலிஸ் நிறுவனத்தின் பங்களிப்பில் பதுளை மாவட்டத்தில் வெலிமடை, ஊவ பரணகம , ஹப்புத்தளை ஆகிய பிரதேச செயலளார் பிரிவில் இந்த அலங்கார மலர் பயிர்ச்செய்கை கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டதில் கிராம சக்தி திட்டத்திற்காக அரசாங்கம் வழங்கும் பணத்தொகையில் முதலாவது தவணைக்கான பணம் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன்படி பதுளை மாவட்டத்திற்கு 22.5 மில்லியன் ரூபாவும், மொனராகலை மாவட்டத்திற்கு 16.5 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
வறுமையை ஒழித்துக்கட்டும் முக்கிய திட்டமாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப கிராம சக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
வறுமையை ஒழித்துக்கட்டுவதற்காக இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்திற்கும் மக்களுக்குமிடையிலான கொடுக்கல் வாங்கலாகவே இருந்து வந்தன. எனினும் கிராம சக்தி மக்கள் இயக்கம் முதன் முறையாக வறுமை ஒழிப்பு இயக்கத்தை வெற்றிபெறச் செய்வதற்கு தனியார் துறையின் பங்களிப்பையும் முறையாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் உற்பத்திகளுக்கு மிகச் சிறந்ததும் நிலையானதுமான விலை மற்றும் தொடர்ச்சியான சந்தை வாய்ப்பை வழங்குதல் என்பதே இதன் நோக்கமாகும்.
மக்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு தேவையான பலத்தை வழங்கி மக்களை முறையாக ஒழுங்குபடுத்தி பாரிய நிறுவனங்களுடன் சமதரத்தில் இருந்து செயற்படக் கூடிய முறைமையொன்று இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வறிய மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமையளித்து கிராம சக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஆரம்பத்தில் 1000 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 2020 ஆண்டாகும்போது அதனை 5000 கிராமங்கள் வரை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்ணான்டோ, டிலான் பெரேரா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாகாண, பிரதேச சபை மக்கள் உறுப்பினர்களும் மாகாணத்தின் அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.