இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பை நெறிப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரதான கட்டுப்பாட்டு நிலையமொன்றிற்கான தேவையை பூர்த்திசெய்து, வலுவான மின்சக்தி முகாமைத்துவத்தினூடாக வினைத்திறனான சேவையை மக்களுக்கு வழங்கும் நோக்குடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் ரூபா 3 பில்லியன் செலவில் இந் நிலையம் நிர்மாணிப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள 25 மின்னுற்பத்தி நிலையங்களும் 63 உப நிலையங்களும் இப்புதிய தேசிய மின்கட்டமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதனால் மின்னுற்பத்தி நிலையங்களின் தகவல்களை நேரடியாக அவதானிக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.
முன்னர் காணப்பட்ட கட்டுப்பாட்டு நிலையத்துடன் 15 மின்னுற்பத்தி நிலையங்களும் 35 உப நிலையங்களும் மாத்திரமே தொடர்புபடுத்தப்பட்டிருந்தன.
சகல மின் வடங்களினூடாகவும் கடத்தப்படும் மின்சக்தியின் அளவு, மின்னுற்பத்தி நிலையங்களில் பிறப்பிக்கப்படும் மின்சக்தியின் அளவு மற்றும் நீர் மின்னுற்பத்தி நிலையங்களின் நீர்த்தேக்கத்திலுள்ள நீர்மட்டம் ஆகியவற்றை கட்டுப்பாட்டு நிலைய பொறியியலாளர் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு இதனூடாக கிடைக்கின்றது.
மேலும் நாளாந்தம் மின் பிறப்பாக்கிகளை செயற்படுத்துவதற்கான செலவினை குறைக்கும் வகையில் மின்னுற்பத்தி திட்டங்களை தயாரிக்கவும் கட்டுப்பாட்டு நிலையத்திலுள்ள பொறியியலாளருக்கு இதனூடாக இயலுமானதாக அமையும்.
மின் கடத்துகை முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டினை மிக நம்பகரமானதாகவும் வினைத்திறனாகவும் நிறைவேற்றக்கூடிய வாய்ப்பும் இதனுடாக கிடைக்கின்றது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து கட்டுப்பாட்டு நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள், கட்டுப்பாட்டு நிலையத்தின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய, இராஜாங்க அமைச்சர் அஜித் பீ பெரேரா, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யு.பீ.கனேகல உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.