ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் விசேட அழைப்பையேற்று ஈரான் செல்லும் ஜனாதிபதி அவர்கள், இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் இலங்கையில் ஈரானின் முதலீடுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தவுள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறையில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இலங்கையின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஈரான் பங்களிப்பு வழங்குகின்றது. இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் ஈரான் முதலீடுகளை செய்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமிய மின்சக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளில் ஒன்றாக ஈரானும் உள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதிப் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் ஈரானுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை பலப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இச்சந்திப்பின்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
ஈரான் நாட்டின் வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட முதலீட்டு வர்த்தக மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், ஈரான் பாராளுமன்றத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.