கௌரவ சபாநாயகர் அவர்களே,
கௌரவ பிரதமர் அவர்களே,
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 08 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகும் இவ்வேளையில் அதில் கலந்துகொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் இலங்கை ஜனாதிபதி என்ற வகையிலும் அரசின் தலைவர் என்ற வகையிலும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2018 ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி என்னால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பின் 70ஆவது சரத்தின் கீழ் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரங்களுக்கு அமைய 08 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த 08 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 07 ஆவது மற்றும் 32, 33 ஆவது சரத்துக்களுக்கு அமைய இன்றைய தினம் இவ்வாறு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது என்பதை அறிவிக்கின்றேன். இதன்போது, நமது நாட்டின் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைய ஒரு பாராளுமன்ற அமர்வினை முடித்து வைத்து புதிய பாராளுமன்ற அமர்வினை ஆரம்பித்து வைப்பதே நிகழ்கின்றது.

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி, எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஆரம்பித்து வைத்து என்னால் முன்வைக்கப்பட்ட கொள்கை அறிக்கையின் தொடர்ச்சியாகவே இன்றைய இந்த அறிக்கையையும் முன்வைக்கின்றேன்.

குறிப்பாக தற்போதைய அரசுக்கு ஆணையினை பெற்றுக்கொடுத்த மக்களின் முக்கிய வேண்டுகோளாக இருந்த, இலங்கை சமூகத்தை மீண்டும் ஜனநாயக மயப்படுத்தி மனிதநேயமும் பொறுப்பும் மிக்க ஒரு சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற விடயத்தை கடந்த மூன்று வருடங்களுள் சிறந்த முறையில் அல்லது நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது என்பதை விமர்சனங்களுக்கு மத்தியிலும் நீங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி இந்த நாட்டு மக்களினால் ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட ஜனநாயக ரீதியிலான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக அச்சமயம் செயலில் இருந்த 7 ஆவது பாராளுமன்றத்தினாலும் இந்த சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 ஆவது பாராளுமன்றத்தினாலும் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பினை நன்றியுணர்வுடன் இத்தருணத்தில் நான் ஞாபகப்படுத்துகிறேன்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி எனது தலைமைத்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தினுள் செயற்பட்ட 7ஆவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மக்கள்நேய சட்ட திட்டங்கள் இருக்கின்றன.

• 2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருள் தேசிய அதிகார சபையினை நிறுவுவதற்கான மாற்றம் செய்யப்பட்ட சட்டதிருத்தம்

• 2015 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒளடத சட்டம்

• 2015 மே மாதம் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்பின் 19 ஆவது சீர்திருத்தம்

ஆகியன இங்கு குறிப்பிடத் தக்கவையாகும்.

குறிப்பாக இங்கே குறிப்பிடப்பட்ட சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகளாகும். அதற்கு அடித்தளமாக அமைந்த இரண்டு முக்கிய விடயங்கள் மீது இங்கே எனது கவனத்தை செலுத்த விரும்புகிறேன்.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் அபிவிருத்திக்காக பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் எவ்வித தடங்கல்களும் இன்றி தேசிய இணக்கப்பாட்டுக்காக ஒன்றுகூடியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2015 ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையில் செயற்பட்ட 7 ஆவது பாராளுமன்றத்தின் அமைவு பற்றி நோக்கும்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 142 ஆசனங்கள் இருந்த அதேவேளை பாராளுமன்றத்தின் பிரதமரை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47 ஆசனங்களே இருந்தன. எவ்வாறாயினும் காலம் காலமாக பாராளுமன்றத்தில் காணப்படுகின்ற பகைமை அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு தேசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் எமது நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு ஒன்றுபட்டு செயற்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் நாட்டினுள் குவிந்து கிடக்கின்ற தீராத தேசிய மட்டத்திலான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டினுள் காணப்படுகின்றது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டது.

அதற்கமைய,

1. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யதார்த்தமாக்கிக் கொள்ள முடியாதிருந்த சேனக்க பிபிலே அவர்களின் ஒளடதக் கொள்கை இன்று யதார்த்தமாகி இருக்கின்றது.

2. சிகரட்டின் தாக்கம் பற்றிய 80 சதவீதம் படங்களிலான எச்சரிக்கை, புதிய புகையிலை மற்றும் போதைப்பொருள் சட்டத்தின் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.

3. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஓர் அரசியல் விடயத்திற்காக ஒன்று திரட்டப்பட்ட அதிகபட்ச எதிர்ப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு எதிராகவே எழுந்தது. ஆயினும் அன்றுமுதல் இன்றுவரை நிறைவேற்று அதிகாரத்தை எதிர்த்த எவருமே அதன் அதிகாரங்களை குறைக்க முன்வரவில்லை. மாறாக அதன் அதிகாரங்களை தான்தோன்றித்தனமாக அதிகரித்துக் கொள்வதே வழக்கமாக இருந்தது. 2015 மே மாதம் 15 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்தாது குறைக்கக்கூடிய ஆகக்கூடிய அதிகாரங்களை குறைக்க, அகற்ற முடிந்தமை இந்த இணக்கப்பாட்டு அரசியலின் உண்மையான பலமாகும்.

ஜனவரி 08 ஆம் திகதி ஆரம்பமான அரசியல் மாற்றத்தை மேலும் யதார்த்தமாக்கும் வகையில் 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பாராளுமன்ற பொதுத்தேர்தலின் பின்னர் 08 ஆவது பாராளுமன்றத்திற்கு தெரிவான பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதையிட்டு அவர்கள் மீதான கௌரவம் கலந்த நன்றியுடன் தெரிவிக்கிறேன்.

அக்காலப்பகுதியில் உங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டதிட்டங்களில் பெரும்பாலானவை நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்பவையாகவே அமைந்தன. அதற்கமைய கடந்த மூன்று வருடங்களில் முன்வைக்கப்பட்ட இரண்டு ஒதுக்கீட்டுச் சட்டங்களுக்கு மேலதிகமாக பொருளாதார துறையை சார்ந்த 18 சட்டங்கள் உங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த அனைத்து சட்டதிட்டங்களும் எம்முன் இருக்கின்ற 10.3 ரில்லியன் (பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான) மாபெரும் கடன் சுமையை முகாமைத்துவம் செய்யும் நோக்கிலேயே ஆகும். அத்தோடு நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான இன்னும் பல சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பேச்சு சுதந்திரத்தை பலப்படுத்தும் வகையில் 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டம் இன்று குடிமக்களுக்கு கிடைத்திருக்கின்ற ஆசியாவிலேயே பலம்மிக்க சட்டமாக கருதப்படுகின்றது.

சர்வஜன வாக்குரிமையை யதார்த்தமாக்கும் வகையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் எமது உள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றியிருக்கிறோம்.

அத்தோடு பேண்தகு அபிவிருத்தியை யதார்த்தமாக்கிக் கொள்ளும் வகையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பேண்தகு அபிவிருத்தி சட்டத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

இடைக்கால நீதி மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்கில் காணாமல்போனோர் பற்றி கண்டறியும் அலுவலகம் பற்றிய சட்டம் மற்றும் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றவியல் வழக்கு சாட்சியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட சட்டம் ஆகியவற்றை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இந்த அரசாங்கம் தமது ஆட்சிக் காலத்தினுள் மக்களுக்காக பெற்றுக் கொடுத்திருக்கும் பல வெற்றிகளைப் பற்றி இங்கு கவனத்தில் கொண்டுவர வேண்டுமென நான் நம்புகிறேன்.

2010 ஆம் ஆண்டு முதல் நாடு இழந்திருந்த ஜிஎஸ்பி வரிச்சலுகையினை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதன்மூலம் 6600 பொருட்கள் தொடர்பில் நாட்டுக்கு நன்மை பயக்க முடிந்திருப்பதுடன் மொத்த வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடிந்திருக்கின்றது. ஆடை மற்றும் மீன் ஏற்றுமதி இவற்றுள் முதலிடம் வகிக்கின்றன.

பெருநகர அபிவிருத்தி மற்றும் துறைமுக அபிவிருத்தி திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. நீதித்துறையின் சுயாதீனத் தன்மை ஊர்ஜிதப்படுத்தப் பட்டிருக்கின்றது. சட்டமும் உத்தரவுகளும் எவ்வித தாக்கமும் இன்றி நாட்டினுள் செயற்பட்டு வருகின்றன. நாட்டில் நீதியின் அதிகாரம் நிலையாக்கப்பட்டிருக்கின்றது. சட்டத்திற்கு முரணான கைதுகளுக்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

சட்டம் மற்றும் ஒழுங்கு பற்றி கவனம் செலுத்தும்போது 2014 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பாரதூரமான குற்றச் செயல்களை 30 சதவீதத்தால் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபை 2017 ஆம் ஆண்டில் 13,200 மில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தை ஈட்டியிருக்கின்றது. 2016 ஆம் ஆண்டின் தேறிய இலாபமான 1,100 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது இது நூற்றுக்கு நூறு சதவீதமான வளர்ச்சியாகும். துறைமுக துறையில் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியிலான பல வெற்றிகளை எம்மால் ஈட்ட முடிந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் நாம் பெற்ற 15.1 பில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானமே அண்மித்த காலத்தில் நாம் பெற்ற உயரிய ஏற்றுமதி வருமானமாகும்.

புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதற்காக பாடசாலைத் துறையிலும் அரச துறையிலும் அனேகமான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டுத் தொழில், நாடு கடந்த உழைப்பாளிகள் ஆகிய துறைகளுக்காகவும்; நாம் மிக முக்கியமான பல வசதிகளை செய்து கொடுத்திருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டின் பின் கல்வித்துறை அபிவிருத்தியில் ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்திட்டம் மாணவர் நலன்புரி திட்டமான ‘சுரக்ஷா” மாணவக் காப்புறுதி, கல்வி மறுசீரமைப்பு, அனைத்து பிள்ளைகளுக்கும் முதலாம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரையிலான கட்டாய தொடர் கல்வியை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம், தேசிய கல்வி நிறுவனத்தினை மறுசீரமைத்தல், மும்மொழிக் கல்வியை ஊக்குவித்தல் ஆகியன கல்வித்துறையில் வளர்ச்சியை காட்டியிருக்கும் துறைகளாகும்.

‘பிள்ளைகளை பாதுகாப்போம்” தேசிய வேலைத்திட்டம், முன்பள்ளி மற்றும் பகல் நேரத்தில் குழந்தைகள் பராமரிக்கும் நிலையங்களின் மனித வள மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல், நிறை குறைந்த பிள்ளைப் பேறு எண்ணிக்கையினைக் குறைத்தல் மற்றும் தாய்மாரின் போஷாக்கு தன்மையினை உயர்த்துதல், வறிய பிரதேசங்களில் போஷாக்கின்மையினை குறைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் பிள்ளைகளுக்கு போசாக்கு மிக்க ஒருவேளை உணவை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தினையும் நாம் ஆரம்பித்துள்ளோம்.

பால்நிலை வன்முறையினை குறைப்பதற்கான தேசிய செயற்திட்டம் தற்போது மிக நேர்த்தியாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படும் செயற்திட்டங்களில் 25 சதவீதமான முதலீடு பெண்களுக்காகவே ஒதுக்கப்படுகின்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முறையான வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை எமது அரசு மிக வேகமாகம் அதேவேளை பாரிய வளர்ச்சியினையும் ஈட்டியிருக்கின்றது. அதன்மூலம் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது. அதிக பொருளாதார நெருக்கடியை கொண்டுள்ள குடும்பங்களுக்காக எமது அரசின் வீட்டுத்திட்டம் மிகுந்த பலனை அளித்திருக்கின்றது.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் பயணத்தில் 2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற அதேவேளை வயோதிப மற்றும் விசேட தேவை உடையரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாட்டினை கட்டியெழுப்பும் பணியில் 2015 – 2017 ஆம் கால எல்லைக்கான சேவை வழங்கும் இலக்கு குழுக்களாக 9 வீதமாகவுள்ள ஊனமுற்றோர், 12.5 வீதமான 60 வயதுக்கும் கூடியோர், மொத்த சனத்தொகையில் 12 வீதமாகவுள்ள தனிப் பெற்றோரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மொத்த சனத்தொகையில் 25 வீதமாகவுள்ள சமுர்த்தி உதவிபெறுவோர் ஆகியோர் கணிப்பிடப்பட்டுள்ளனர்.

மின்சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியில் சூரிய சக்தி செயற்திட்டம் மூலம் 150 மெகாவோட்ஸ் மின்சக்தியை புதிதாக தேசிய மின்சக்தி கட்டமைப்புக்குள் கொண்டுவர முடிந்துள்ளது.

எதிர்காலத்தில் மின்சாரத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக கலப்பு மின் உற்பத்தி திட்டமொன்றை நாம் முன்வைத்துள்ளோம். அதேபோல் இதுவரை எந்த அரசினாலும் கண்டுகொள்ளப்படாத சுமார் 275,000 குடும்பங்களின் குப்பி லாம்பு வெளிச்சத்தில் கல்விகற்றுவந்த யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டுவந்தோம். அவர்களின் இல்லங்களுக்கு அரசின் செலவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அபிவிருத்திக்காக முக்கியத்துவம் வழங்குவது விசேட அம்சமாகும். ஏனைய நாடுகள் முகங்கொடுக்கும் கடும் காலநிலை மாற்றங்களுக்கு நாமும் முகங்கொடுத்துள்ளோம். கடந்த பல வருடங்களாக நிலவிய வரட்சியால் விவசாய உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன் முன்னிருந்த அரசாங்கங்களைப் போலேவே எமக்கும் வெளிநாட்டிலிருந்து அரசியை இறக்குமதி செய்ய நேர்ந்தது. வருடாந்த மழை வீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் விவசாயத்துறையின் உற்பத்தி மற்றும் வருமானம் நூற்றுக்கு முப்பது வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதுடன் நீர் மின் உற்பத்திக்கும் அது பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் இரசாயன உரங்களை தவிர்த்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் பல தேசிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லக் சதொச விற்பனை மையங்கள் 300 இலிருந்து 400 வரை உயர்த்தப்பட்டிருப்பதுடன் அவற்றினூடாக குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறன. நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக நுகர்வோர் சங்கங்கள் புதிய தோற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார துறைக்குள் இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தும் விதமாக வரலாற்று சிறப்புமிக்க செயலை நாம் புரிந்துள்ளோம். பல்வேறு தடைகளை சந்தித்தவாறு 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் எதிர்பார்ப்பாக இருந்த புதிய ஔடதக் கொள்கையை நாம் நிறைவேற்றினோம். அதனூடாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ஒரு புற்று நோயாளியின் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் மொத்த மருத்துவ செலவையும் அரசு ஏற்கும் கொள்கையை முன்வைத்துள்ளது.

இருதய நோயாளிகளின் சத்திர சிகிச்சை செலவுகள் அனைத்தும் அரசு ஏற்றுக்கொள்ளும் புதிய திட்டம் முதன்முறையாக எம்மால் நிறைவேற்றப்பட்டதுடன் இருதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் பொருத்துவதனை இலவசமாக வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

எமது வைத்திய மற்றும் தாதிச்சேவையை முதன்மையாகக் கொண்ட சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பாராட்டை நாம் பெற்றுள்ளோம்.

எமது அரசாங்கம் நிறைவேற்றிய தேசிய மது கொள்கை தொடர்பாக மகிழ்ச்சியடைய முடியும்.

இனங்காணப்படாத சிறுநீரக நோய்கள் தொடர்பாக முக்கிய அவதானத்தை செலுத்துவதுடன், நிவாரணம் தடுப்பு மற்றும் மருத்துவ துறைகள் விரிந்த தேசிய திட்டமாக செயற்படுத்தினோம்.

3,600 மில்லியன் ரூபா செலவில் சிறுநீரக நோயை இனங்காணுவதற்கான நீர் பரிசோதனை மையங்களை உருவாக்கியதுடன், அத்திட்டம் தற்போது பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் இயங்கிவருகிறது.

தொழில் மற்றும் தொழில்நுட்ப துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அனைத்து பாடநெறிகளையும் இலவசமாக கற்பதற்கு 2017 முதல் நாம் வாய்ப்பை வழங்கியுள்ளோம்.

தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதனூடாக புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் பணிக்கான மனிதவள மேம்படுத்தலுக்கான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்.

வறுமையை இல்லாதொழிப்பதற்காக சமுர்த்தி பெறுபவர்களின் கொடுப்பனவுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. கிராம சக்தி மக்கள் செயற்திட்டதினூடாக இவ்வருடம் மட்டும் 2000 கிராமங்களை முன்னேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதியோர் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு பொதிக்கான கொடுப்பனவு ரூபா 500 இலிருந்து 2,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்க உத்தியோகத்தர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் துறையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் விசேட அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹபொல புலமைப்பரிசில் தொகை 2500 ரூபாவிலிருந்து 5000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட 3000 ரூபா 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகக்குறுகிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டதுடன் உலகிலுள்ள மிகப்பெரிய விமானங்களை தரையிறக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை இலங்கைக்கான அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் மூன்றாவது துறையாக விளங்குகிறது. ஒட்டுமொத்த அந்நிய செலாவணி வருமானத்தின் 15 சதவீதம் சுற்றுலாத்துறை மூலமாக இன்று கிடைக்கப்பெறுகிறது.

இராணுவத்தினருக்கான ‘’சத்விரு, சங்ஹிந்த’’ இராணுவ வீடமைப்புத் திட்டம் 2017இல் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் இன்று அதில் 90 சதவீத பௌதீக வளர்ச்சியை காணமுடிகிறது.

உபாயமார்க்க தேசிய பாதுகாப்பு தொடர்பாடல் திட்டம் 2015 இல் ஆரம்பித்ததுடன் அதன் வளர்ச்சி தொடர்பாக மகிழ்ச்சியடைய முடிகிறது.

அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கான விசேட சம்பளம் மற்றும் கொடுப்பனவு எம்மால் வழங்கப்பட்டுள்ளதுடன், அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் விதவைகளுக்கான “ரணவிரு பாதுகாப்பு” கொடுப்பனவின் கீழ் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களின் மனைவியருக்கும், காலமான இராணுவத்தினரின் மனைவியருக்கும் அவர்களின் வாழ்நாள் வரை கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம், ஓய்வூதிய திணைக்களத்தினால் நிறைவேற்றப்படுகிறது.

ஓய்வூதிய நிலுவைகளை முறையாக செலுத்தும் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் 40,475 ஏக்கர் அரச மற்றும் தனியார் காணிகள் முப்படையினரின் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு கிடைக்காமல் இருந்த யுத்தத்தின்போது இராணுவத்தினர் பயன்பாட்டுக்காக பயன்படுத்திய காணிகளில் 85 சதவீத காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறையின் கீழ் 10,000 காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் திட்டம் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

பல தடைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு, பாரிய தடைகளுடன் மிக மெதுவாகவே செயற்படுத்தப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய முன்னேற்றத்தை எம்மால் அடைய முடிந்துள்ளது.

2015 முதல் புதிய துரிதப்படுத்தும் கட்டிட கட்டுமானத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் தகுந்த செயற்குழுவை நியமிப்பதனூடாக பராக்கிரம சமுத்திரம் போல் 6 மடங்கு பெரியதான மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றி, விவசாயிகளுக்கு நீர் விநியோகம் செய்வதுடன் களுகங்கை செயற்திட்டத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கும் விதமாக வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தேசிய விவசாய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன், வட மத்திய மாகாணத்தின் கால்வாய்களை மே்மபடுத்தியதுடன் 800 சிறிய குளங்களையும் வடமாகாணத்தில் 1400 சிறிய குளங்களையும் ஊவா மாகாணத்தில் 350 சிறிய குளங்களையும் புனரமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2500 க்கும் மேற்பட்ட சிறிய குளங்களை ஒரே நேரத்தில் புனரமைக்கும் மிகப்பெரிய திட்டமானது சுதந்திரத்திற்கு பின் ஒரு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாரிய நீர்ப்பாசன திட்டமாகும்.

வடமேல் மற்றும் உலர்வலய பகுதிகளில் நீர்சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர முடிவை வழங்குவதற்காக வடமேல் பெரிய கால்வாய், வடமத்திய பெரிய கால்வாய், மினிப்பே பெரிய கால்வாய் என்று இலங்கை மக்களின் எதிர்கால பயன்பாட்டுக்காக பிரமாண்ட நீர்ப்பாசன திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சுற்றாடல் பாதுகாப்பின் கீழ் பொலித்தீன், பிளாஸ்டிக் தொடர்பில் கடும் சட்டங்களை நிறைவேற்றியதுடன், ஐக்கிய நாடுகள் ‘’தூய்மையான சமுத்திரம்’’ திட்டத்தின் கீழ் தெற்காசிய பிராந்தியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் மத்தியில் கண்டல் தாவர பாதுகாப்பிற்கான முதன்மை நாடாக எமது நாடு விளங்குகிறது.

சுற்று சூழல் பாதுகாப்பு தேசிய வேலைத்திட்டம் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம், பிள்ளைகளைப் பாதுகாப்போம் தேசிய நிகழ்ச்சித்திட்டம், பேண்தகு பாடசாலை திட்டம் ஆகியவை 90 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. சுற்றாடல் மாசு கட்டுப்பாடு, கழிவு முகாமைத்துவம், வன பாதுகாப்பு, பேண்தகு காணி முகாமைத்துவம், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஆகிய மேம்படுத்தும் விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளித்துள்ளோம். மக்களின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த கழிவு முகாமைத்துவத்திற்கு நிரந்தர செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நான் இதுவரை குறிப்பிட்டது உங்களின் தலைமைக்கு கீழ் 08 ஆவது பாராளுமன்ற, முதலாவது சபை அமர்வில் தற்போதைய அரசினால் பெற்றுக்கொண்டுள்ள நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்திக்கும் குடிமக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக மக்களுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான மற்றும் வளர்ச்சி ரீதியான வெற்றிகளாகும்.

இந்த வெற்றிகள் மூலமாக இந்த நாடு ஜனநாயக மற்றும் மனித நேய நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரச முறையொன்று மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேவையான நிரந்த அடித்தளமொன்றை உருவாக்கியுள்ளோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் நாம் எதிர்கொள்ள வேண்டிய தடைகள் விலகிச் சென்றதாக கருத முடியாது.

அரசின் புதிய பயணப்பாதைக்கு தேவைப்படும் விடயங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தி நாடு முகங்கொடுத்திருக்கும் 10 இலட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான கடனை மக்களின் மீது சுமத்தாமல் முகாமைத்துவம் செய்வது கட்டாயமாகவுள்ளது. வறுமையில் வாடும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பது, அரச சேவையை முறைமைப்படுத்துவது மற்றும் வினைத்திறனானதாகவும் மாற்றுவதுடன், நெகிழ்வுத் தன்மையுடன் மக்களுக்கு சேவையை வழங்குவதற்கான பணிகளை வலுப்படுத்துவதற்கு தேவைப்படும் கொள்கைகளை உருவாக்குவது, செயல் உபாயங்களை கண்டறிந்து முகாமைத்துவ முடிவுகளை எடுப்பதும் இங்கு முதன்மையாகும்.

படித்த இளம் சமூகத்தினர் மற்றும் மக்கள் விரும்பும் துரித வளர்ச்சிக்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதோடு அதை எதிர்காலத்திற்காக தள்ளிவைக்க முடியாது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே மற்றும் பறங்கிய இனத்தவர் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு தங்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகளை நாம் உறுதிசெய்ய வேண்டும். அது இலங்கையர் என்ற முறையிலேயாகும்.

துரித பொருளாதார வளர்ச்சிக்காக அரச மற்றும் தனியார் துறையின் செயற்பங்களிப்பை பெற்றுக்கொள்ளல், உற்பத்திப் பெருக்கத்தையும் போட்டித்தன்மையையும் அதிகரித்தல், நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி பொருளாதார வளர்ச்சியை நோக்காக கொண்ட வள முகாமைத்துவம் அரச நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் அவற்றுள் முதன்மையாகும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள செயற்படுவது என்பதன் அர்த்தம் இலங்கையை அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் நாடாக உருவாக்கும் எமது முதல் கொள்கையை நிறைவேற்றிக்கொள்வதேயாகும்.

எமது இரண்டாவது கொள்கை அரசியல் ஸ்திரத்தன்மைக்காக தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வதாகும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற செயல்வினைமிக்க அரச தந்திரத்தை உருவாக்குவது மூன்றாவது குறிக்கோளாகும். எனது ஆட்சிக்காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட வெற்றிகளை பெறுவதே எனது ஒரே எண்ணமாகும்.

என்னால் 2015 செப்டம்பர் முதலாம் திகதி உங்கள் முன் ஆற்றப்பட்ட தலைமை உரையின் சாரம் இதுவாகும். அன்று நாம் கூறியது நீங்கள் இதுவரை எந்தவித பாராளுமன்ற உறுப்பினரும் முகங்கொடுக்காத மாற்றத்திற்கான யுகத்தின் படைப்பாளிகள் என்றாகும். மாற்றத்திற்கான யுகம் எப்போதும் கடுமையான மற்றும் விரும்பத்தகாத காலகட்டமாகவே உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது.


கௌரவ சபாநாயகர் அவர்களே,

இன்று சகல இலங்கை மக்களும் சௌபாக்கியத்தின் சுதந்திரத்தினை பெற்றுக்கொள்ளவே எதிர்பார்க்கின்றனர். இலஞ்சம், ஊழல், மோசடி, வீண்விரயம் என்பவற்றிற்கு எதிராக செயற்படுதல் தேசத்தின் எதிர்காலத்திற்கான தற்பாதுகாப்பாகும்.

இன்று ஆரம்பமாகும் இந்த புதிய அமர்வினை அந்த எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பமாகவே கருதவேண்டும்.

இலங்கையில் வருடாந்தம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சத்து முப்பத்தோறாயிரம் ஆகும். வருடாந்தம் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து முப்பத்தோறாயிரம் ஆகும். அதற்கேற்ப எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் வருடாந்தம் சுமார் இரண்டு இலட்சம் அளவில் அதிகரிப்பு ஏற்படுகின்றது. எமது புதிய தலைமுறையினருக்கு இலக்குகள் காணப்படுகின்றன. கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் இலக்குகள் காணப்படுகின்றன. அதேபோல் நாட்டிற்கும் இலக்குகள் காணப்படுகின்றன. அன்று நான் அரசாங்கத்திலிருந்து விலகி மக்களின் ஆசீர்வாதங்களுடன் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கியமைக்கு தேசத்தின் எதிர்காலமும் எமது தாய் நாட்டின் உன்னதமான குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட தீர்க்கமான உறுதியான இலக்குகளை நிறைவேற்றக்கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாடுமே காரணமாக அமைந்தது.

தற்போது எமது நாடு பல்வேறு கட்சிகளினதும் குழுக்களினதும் அரசியல் பலத்தினை உரசிப் பார்ப்பதற்கு பொருத்தமானவொரு சூழ்நிலையில் காணப்படவில்லை. நாட்டின் முன் காணப்படும் சவால்களை ஒன்றிணைந்து வெற்றிகொள்ள வேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றது என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதன்போது, அந்த முன்னுரிமைகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கு முதலில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்களையும் இரண்டாவதாக அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காணப்படும் அதிகாரப் போராட்டங்களையும் சமனிலைப்படுத்த வேண்டும். தற்போது காணப்படும் சகலவித அதிகார மோதல்களினாலும் மக்களின் எதிர்பார்ப்புக்களே பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும், உண்மையான மக்கள் நேய செயற்திட்டங்களின் நிபந்தனைகளாக பின்வரும் 15 விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

1. மக்களின் பொருளாதார சுபீட்சத்தை உறுதிப்படுத்தல்.
2. வறுமையை இல்லாதொழித்தல்.
3. இளைஞர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல்.
4. அரச சேவையாளர்களுக்கு திருப்திகரமான சூழலை ஏற்படுத்தல்.
5. பொலிஸ் மற்றும் முப்படையினரின் தன்னம்பிக்கையையும் உயர் குறிக்கோள்களையும் உறுதிப்படுத்தல்.
6. சட்டம், அதிகாரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தினை சமூகத்தில் உறுதி செய்தல்.
7. தமிழ் மக்களின் சம உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல்.
8. முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல்.
9. மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல்.
10. நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி, உறுதி செய்து தேசத்தின் அடையாளத்தினை வலுப்படுத்தல்.
11. பெண்களை பலப்படுத்துதலும் அவர்களது நேரடி பங்களிப்பும்
12. சமூகத்திலுள்ள விசேட தேவைகளை உடைய பிரஜைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக செயற்படல்.
13. நாட்டின் இயற்கைச் சூழலை பாதுகாக்கும், தேசிய வளங்களை எதிர்கால சந்தியினருக்கும் பெற்றுத்தரக்கூடிய பேண்தகு அபிவிருத்தியை உறுதிசெய்தல்.
14. சமய நம்பிக்கைகள் எமது மரவுரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் சகல சமய பெரியார்களையும் மத குருமார்களையும் மகா சங்கத்தினரையும் பேண்தகு முறையில் போஷித்தல்.
15. அரசியல் பலப் பரீட்சைக்கு அப்பால் சென்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல இன, மத, அரசியல், கட்சிகளை ஒன்றிணைத்து கட்டியெழுப்பப்படும் தேசிய பேண்தகு அபிவிருத்தி இலக்கினை உருவாக்குதல்.

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளின் கீழ் செயற்படும்போது பூரண மற்றும் நுண் அபிவிருத்தி உபாய மார்க்கங்களினூடாக செயற்பட வேண்டியதுடன், அவற்றின் வெற்றிக்காக கட்டமைக்கப்பட்ட மாற்றங்களும் அத்தியாவசியமாகும் என குறிப்பிட வேண்டும்.

அதற்கமைய மக்களின் பிரதிநிதிகளான நீங்கள் ஒன்றிணைந்து மேற்கூறப்பட்ட நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துபவர்களாகவோ அல்லது அதன் மேற்பார்வையாளர்களாகவோ அல்லது ஆலோசகர்களாகவோ நியமிக்கப்படலாம். இந்த ஒட்டுமொத்த செயற்பாட்டை மேற்பார்வை செய்கையில் அபிவிருத்தி பெறுபேறுகளின் அடிப்படையில் அமைந்த அபிவிருத்தி தொடராய்வு செயற்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்த என்னால் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக அமையும்.

இந்த அரசாங்கம் தொடர்பாக பல்வேறு தரப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களினால் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றனர். அவ்வனைத்து விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அரசாங்கம் என்ற வகையில் நாம் மிகுந்த நேர்மையோடு அவை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அது தொடர்பாக நாம் சுய விமர்சனத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்பதை தெரிவிக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை ஏற்கனவே நாம் உறுதி செய்துள்ளோம். ஆயினும் இன்னும் சுதந்திரமாக உள்ள பாரியளவிலான மோசடியாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமை தொடர்பாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

ஊழலை முற்றாக இல்லாதொழித்து சகல ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துதலே எமது ஏகோபித்த எதிர்பார்ப்பாகும். அதுவே ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையுமாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாட்டின் இரண்டு பிராதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டே எம்மீது சுமத்தப்படும் மற்றுமொரு குற்றச்சாட்டு ஆகும். நாட்டிற்கு எதிராக உள்ள சவால்களை கருத்திற்கொள்ளும்போது சகல கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டிற்காக முன்நோக்கிப் பயணிக்க வேண்டும். பாரியதொரு கடன் சுமை எம் முன்னே உள்ளது. பயனற்ற வீண்விரயங்கள் செய்யப்பட்ட யுகத்தின் இழப்புகளையும் நாம் நீக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் நாடு மீண்டும் முன்னேற்றமடைவதற்குள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவே என்பதை கருத்திற்கொண்டு சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
வைராக்கியம், குரோதம் நிறைந்த நாட்டில் ஆட்சி மாற்றங்களின்போது இடம்பெறும் பாரியளவிலான அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத, தோல்வியடைந்தவரும் வெற்றியாளரும் அபிமானத்தோடு வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியதும் இன்றைய அரசியல் கடமையாகுமென நான் கருதுகின்றேன்.

எமது உன்னதமான தாய்நாட்டிற்கு நேர்மையாக சேவையாற்றினேன் என்ற உணர்வு எமது மனசாட்சியாக நாம் மறையும் வரை எம் மனதில் எதிரொலிக்க கூடிய வகையில் செயலாற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக அமைய வேண்டும். அதற்கான எமது எதிர்காலத்திற்காக நாம் அரப்பணிப்புடன் செயற்படுவோம்.

இந்த அரசாங்கத்தை அமைக்கும்போது எமக்கு எதிராக பல சவால்கள் காணப்பட்டன. ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆதிக்கத்தையும் மீண்டும் நிலைநாட்டுவதே அவற்றுள் முதலாவதாகும். இனங்களுக்கிடையே நம்பிக்கையையும் ஒற்றுமையையும் உறுதி செய்தல் இரண்டாவதாகும். பாரிய கடன் சுமையில் சிக்கியிருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், நாம் இழந்திருந்த சர்வதேசத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளல் என்பனவும் அவற்றுள் உள்ளடங்குகின்றன. எவ்வாறான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும் இவ் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள கடந்த மூன்று வருட காலத்திற்குள் எமது அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதேபோன்று இவ்வனைத்து துறைகளிலும் மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய பல விடயங்களும் காணப்படுகின்றன.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

பலமான, நவீன இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அத்தியாவசியமான முயற்சியாண்மை முகாமைத்துவத்தில் நாட்டை ஈடுபடுத்தலும் தேசிய வர்த்தக சமூகத்திற்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான கொள்கைகளை உருவாக்குதலும் அவசியமாகும்.

அத்தோடு எமக்கு பழக்கப்பட்ட மோசடி அரசியலை தோற்கடித்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் மக்கள் நேய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக பாடுபட வேண்டியுள்ளது. அனைத்து குடிமகனுக்கும் வெற்றிபெறக்கூடிய பொருளாதாரமே தேவைப்படுகின்றது.

இங்கே, குறிப்பாக எமது நாட்டின் விவசாய மக்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். மூன்று வருடங்களாக தகுந்த மழையின்மையால் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கான விவசாய துறையின் பங்களிப்பும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிக மழை மற்றும் நீண்டகால வரட்சி ஆகியன பூகோள ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் காலநிலை மாற்றங்களின் விளைவாகவே இருக்கின்றன. வரட்சி நிலவிய காலத்தில் அப்பிரதேச மக்களுக்கு உணவை பெற்றுத்தரும் உதவித்திட்டங்கள் உள்ளிட்ட நிவாரண திட்டங்களை செயற்படுத்துவதற்காக 38000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருக்கின்றது.

இயற்கையின் பாதகமான தாக்கங்களிலிருந்து மீண்டு உரிய முறையில் வெற்றிகரமாக விவசாயத்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான வழியினை நிர்மாணித்தல் அவசியமாகும்.

விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு இன்னும் நாம் போதுமான அளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என மகிழ்ச்சி கொள்ள முடியாது. விவசாய உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல், பகிர்ந்தளித்தல் ஆகிய துறைகளை நவீனப்படுத்த வேண்டியிருக்கிறது.
அத்தோடு நடுத்தர வருமானத்தினைப் பெறும் ஒரு நாடு என்ற வகையில் புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்துறை மீது கவனம் செலுத்த வேண்டிய காலம் வந்திருக்கின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நிலையான நாட்டின் அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றி கொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நான் நம்புகிறேன். எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் பொறுமையிழப்பினை நிரந்தரமாக சமரசப்படுத்த வேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும். பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது. கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன்.

யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வதென்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அச்சவால் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

தேசிய பாதுகாப்பு மீதான எமது கவனமும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. எமது பூமியின் பாதுகாப்பு மனிதர்களின் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியன இங்கு முக்கிய துறைகளாக அமைகின்றன. பூமியின் பாதுகாப்பின் கீழ் கடல் பரப்பு மீதும், மனிதப் பாதுகாப்பின் கீழ் உணவு மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆகியனவும் முக்கியத்துவம் பெறுகின்றது குறிப்பாக இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்திருப்பதால் எமக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதேபோல் நாம் எதிர்கால நோக்குடன் மிக நுட்பமாக கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு துறை சவால்களும் இருக்கவே செய்கின்றது என்பதை நாம் எமது கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஆதலால் சர்வதேச உறவுகளை பேணுவதில் நடுநிலையான, நட்பு ரீதியிலான கொள்கையின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். எமது நட்பு ரீதியிலான வெளிநாட்டுக் கொள்கையே எமக்கு மிகுந்த பலனைப் பெற்றுத் தந்திருக்கின்றது. உலகில் அனைத்து நாடுகளைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச அமைப்புகளுடன் நாம் மிகுந்த நட்பையும் தோழமையையும் உருவாக்கிக்கொள்வதற்கு வேறொரு சந்தர்ப்பம் இல்லை என்றே கூறலாம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

2015 இல் நான் தலைமையேற்ற யுக மாற்றம் இன்னும் நிறைவடையவில்லை. அன்று அது இலங்கைக்கு புதியதோர் அனுபவமாக அமைந்திருந்தது. 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட மாதம் முதல் தேசிய அரசை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தாலும் அதற்கான அரசியல் மற்றும் சமூக முதிர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பது கடந்த மூன்றாண்டுக்குள் ஏற்பட்ட சம்பவங்கள் ஊடாக மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. ஒப்பந்த ஜனநாயகம் மற்றும் உரையாடல் ஜனநாயகம் ஆகியவற்றை இன்று பல நாடுகள் தனது ஆட்சியின் அடிப்படையாக கொண்டு செயற்பட்டாலும் எமக்கு அவ்வகையான எண்ணக்கருக்கள் புதியதாகவே உள்ளன.

நிகழ்கால அரசியலை பார்வையிடும்போது எதிர்க்கட்சியின் செயற்பாடு வேறொரு வழியில் செல்ல வேண்டியுள்ளதுடன், தேசிய அரசுக்குள் சகோதர கட்சிகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தேவைபட்டுள்ளது. தேசிய ஆட்சி ஒன்றுக்கொன்று வித்தியாசமான கோணங்களைக் கொண்ட கட்சிகளின் இணைப்பால் உருவாகியுள்ளது. அந்த கட்சிகள் அனைத்தும் புத்த பகவான் காட்டிய வழியில் செல்லவேண்டியதுடன் வஜ்ஜீன் சமூகத்தினரைப் போல ஒற்றுமை மற்றும் பேச்சுவார்த்தையை முதன்மையாக வைத்து அவர்கள் பின்பற்றிய வழிகளை நாமும் பின்பற்றுவோம். ஜனாதிபதி என்ற வகையில் கடந்த மூன்றாண்டுகளாக நான் இவ்வாறே செயற்பட்டேன். அது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வெற்றிக்கு காரணமாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!

இறுதியாக நாம் அரசாக எழுந்து நிற்பதுடன், பொருளாதார அபிவிருத்தியை பெற்றுக்கொள்கையில், எமது உரிமைகள் போலவே, தேசியத்தன்மை, கலாசாரம், எமது விதிமுறைகள் ஆகியவற்றை வலுவான அரசியல் சிந்தனையுடன் செயலாற்ற வேண்டுமென்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். பொதுமக்களின் அரசியல் இதயத் துடிப்பை உணர்ந்து செயற்படுவதை நாம் நோக்காகக்கொண்டு இலங்கையை வெற்றிபெற்ற அரசாக கட்டியெழுப்புவதற்கு வருமாறு அழைப்பு விடுவதுடன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெற்றி கிடைக்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன்.


நன்றி