பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக நேற்று (19) பிற்பகல் லண்டன் நகரிலுள்ள லென்கெஸ்டர் இல்லத்தில் இடம்பெற்றதுடன் அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநலவாய நிறைவேற்று சபையில் கலந்துகொள்ள வருகைதந்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார் அன்புடன் வரவேற்றார்.
உலக நாடுகள் பலவற்றின் அரச தலைவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த நிறைவேற்று சபையில் பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு தீவு என்ற வகையில் எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டிற்காக எமது நிலப்பரப்பு, காடுகள், ஆறுகள் மற்றும் சமுத்திரம் என்பவற்றுடன் பேண்தகு எதிர்காலத்தை உறுதி செய்தல் தொடர்பாக இலங்கை மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்டார்.
பூகோள ரீதியில் இலங்கை கேந்திர முக்கியத்துவமுடைய மையப் புள்ளியில் அமைந்துள்ளதுடன், உலகின் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதார சக்தியாக ஆசிய நாடுகளே உருவெடுத்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நாடும் தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் காரணமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்களினால் வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
வறுமையை இல்லாதொழித்தல், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல், சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைவதற்காக எமது மக்களுக்கு கடல்சார்ந்த சூழலில் இருந்து அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் நிரந்தரமான, பேண்தகு எதிர்காலத்தை அடைவதற்கான மார்க்கம் இதுவாகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய இராச்சியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள “தூய்மையான சமுத்திரங்களுக்கான ஒப்பந்தத்திற்கு” பூரண ஒத்துழைப்பினை வழங்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இந்த பின்னணியில் “பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனத்தை” நாம், சமுத்திரங்கள் சகலருக்கும் பொதுவான பொறுப்பும் மரபுரிமையும் ஆகும் என்றவகையில் அதனை எமது ஒன்றிணைந்த முயற்சியினால் பாதுகாக்க வேண்டும் என்பதனால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றோம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைவரையும் ஒன்றிணைத்து, நம்பகரமான வழிமுறைகளினூடாக இணைந்து செயற்பட்டு முன்னோக்கி பயணிக்கவும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவும் கூடிய இலக்குகளை அடைதலே பேண்தகு எதிர்காலத்திற்கான இலக்காகும் என தெரிவித்தார்.
பொதுநலவாய அமைப்பு இது தொடர்பாக பரஸ்பர நன்மை பயக்கத்தக்க புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான பின்னணியை வழங்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
பொதுநலவாய நிறைவேற்று சபையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 19.04.2018
பேண்தகு அபிவிருத்தி என்பது அபிவிருத்தி தொடர்பாக உபயோகிக்கப்படும் ஒரு பிரயோகமாகும். இதனால் எல்லா அரசாங்கங்களும் அவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துகின்றன. ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையும் பேண்தகு எதிர்காலத்தை ஏற்படுத்துவதனை தனது பிரதான இலக்காகக் கொண்டுள்ளது.
ஒரு தீவு என்ற வகையில் எமது எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டிற்காக எமது பூமி, காடுகள், ஆறுகள் மற்றும் சமுத்திரம் என்பவற்றுடன் பேண்தகு எதிர்காலத்தை உறுதி செய்தல் தொடர்பாக இலங்கை மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையை கடல்வழிப் பாதையின் மையப் பிரதேசமாக மாற்றுதல் தொடர்பான பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பூகோள ரீதியிலும் இலங்கை கேந்திர முக்கியத்துவமுடைய மையப் புள்ளியில் அமைந்துள்ளது. எமது நாட்டிலிருந்து தெற்கு திசையில் சுமார் பத்து கடல் மைல் தூரத்திலேயே கிழக்கு – மேற்கு கடல் மார்க்க வணிகப் பாதை அமைந்துள்ளது.
வருடாந்தம் அறுபதாயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் இந்த பாதையினூடாக பயணிக்கின்றன. அவற்றினூடாக உலகளாவிய எண்ணெய் கொள்வனவுகளின் மூன்றில் இரண்டு பங்கும் அரைவாசிக்கும் அதிகமான கொள்கலன்களும் இப்பாதையில் கொண்டு செல்லப்படுகின்றன.
உலகின் வளர்ச்சியடைந்துவரும் பொருளாதார சக்தியாக ஆசிய நாடுகளே உருவெடுத்து வருகின்றன.
ஆசிய வலய நாடுகள் இவ்வாறு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுவரும் வேளையில் எமது இலங்கை தேசமும் தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் காரணமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அனுகூலங்களினால் வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது ஆச்சரியமன்று.
வறுமையை இல்லாதொழித்தல், தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தல், சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைவதற்காக எமது மக்களுக்கு எமது கடல்சார்ந்த சூழலில் இருந்து அனுகூலங்களை பெற்றுக்கொள்ள வழியமைக்க முடியும். நிரந்தரமான, பேண்தகு எதிர்காலத்தை அடைவதற்கான மார்க்கமும் இதுவாகும்.
ஐக்கிய இராச்சியத்தினால் முன்மொழியப்பட்டுள்ள “தூய்மையான சமுத்திரங்களுக்கான ஒப்பந்தத்திற்கு” எமது பூரண ஒத்துழைப்பினை வழங்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இவ்விடயம் தொடர்பில் உதாரணமாக கூறின், காலநிலை மாற்றம் தொடர்பில் நாம் சர்வதேசத்துடன் இணைந்து செயலாற்றி வருகின்றோம்.
இந்த பின்னணியில் “பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனத்தை”
நாம், சமுத்திரங்கள் சகலருக்கும் பொதுவான பொறுப்பும் மரபுரிமையும் ஆகும் என்றவகையில் அதனை எமது ஒன்றிணைந்த முயற்சியினால் பாதுகாக்க வேண்டும் என்பதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றோம்..
“பசுமை பிரகடன வீரர்களாக” சேவையாற்ற கிடைத்தமை தொடர்பிலும் ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நாடு பாரிஸ் பிரகடனத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, 2030 ஆம் ஆண்டிற்கான பேண்தகு அபிவிருத்தி திட்டத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இவை பேண்தகு எதிர்கால மேம்பாட்டிற்கு அத்தியாவசியமாகும்.
2016 ஆம் ஆண்டில் நீலப் பசுமை அபிவிருத்திக்கான உபாய மார்க்கத்தை நாம் எமது நாட்டில் ஆரம்பித்து வைத்தோம். இந்த நீலப் பசுமை திட்டத்தின் ஊடாக வளி மாசடைதலைக் குறைந்த மட்டத்தில் பேணுவதுடன், பொருளாதார அபிவிருத்திக்கான வழிமுறைகளை ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிகளவிலான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை காரணமாக சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைப்பதற்காக எமது அரசாங்கம் 20 மைக்ரோன் அல்லது அதற்கு குறைந்த அளவுடைய பொலித்தின் பாவனையை தடை செய்துள்ளது.
எனது அலுவலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் வேறு கருத்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களின் கீழ் நீர்க்குழாய் கட்டமைப்பு மற்றும் குளங்களை அபிவிருத்தி செய்வதனூடாக சூழல் மாசடைதலை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமுத்திர மற்றும் நன்னீர் வளங்கள் பேண்தகு தன்மையுடன் உபயோகிக்கப்படுவதுடன், சூழல் நேயமான, சேதன விவசாய வழிமுறைகள் மற்றும் தூய்மையான, புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் உருவாக்கம் என்பன நாம் முன்னுரிமை அளித்து செயற்படும் துறைகளாகும்.
பேண்தகு எதிர்காலத்திற்கான எனது பொதுவான இலக்குக்காக, அனைவரையும் ஒன்றிணைத்து, நம்பகரமான வழிமுறைகளினூடாக இணைந்து செயற்பட்டு முன்னோக்கி பயணிக்கவும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. பொதுநலவாய அமைப்பு இது தொடர்பாக பரஸ்பர நன்மை பயக்கத்தக்க புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான பின்னணியை வழங்கும். பேண்தகு எதிர்காலத்தினை உறுதி செய்வதற்கு அத்தியாவசியமான விடயமாக அமைவதனால் பொதுநலவாய அமைப்பின் இந்த இலக்குகளை அடைய நாம் அர்ப்பணிப்புடன் செயற்படல் வேண்டும்.
நன்றி.