சம்பிரதாயபூர்வமாக சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட அரிசியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு தானம்செய்யும் விழா அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆசிர்வாதத்துடன் விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினூடாக 51ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னர் ஆட்சிகாலம் முதல் இடம்பெற்றுவரும் இந்நிகழ்ச்சியில் நாடுமுழுவதும் உள்ள பெருமளவு விவசாயிகள் கலந்துகொண்டதுடன், உரிய காலத்தில் மழை கிடைக்கவும் நாடு விவசாயத்துறையில் செழித்து விளங்கவும் விவசாய துறையில் நாடு தன்னிறைவடைந்து சுபீட்சமான பொருளாதாரம் கிடைக்கவும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.
புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் முதலில் ஜயஸ்ரீ மகா போதியை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், புத்தரிசி விழாவில் இணைந்துகொண்டார்.
நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசிப் பாத்திரம் ஜனாதிபதி அவர்களினால் பாரம்பரிய முறைப்படி சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கு பூஜை செய்யப்பட்டது.
வேடர்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தனோவினால் சம்பிரதாயபூர்வமாக ஜயஸ்ரீ மகா போதிக்கு தேன் பூஜைக்கான தேன் பாத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை தேசிய விவசாய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அந்தந்த மாகாணங்களுக்குரிய விதை நெல் விவசாயிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவினால் குத்தரிசி விழா தொடர்பான நினைவுச் சின்னம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வடக்கு மற்றும் மத்திய தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்கக் தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் விவாசயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான சந்திராணி பண்டார, பீ.ஹரிசன், பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ. திஸாநாயக்க, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பீ. விஜேரத்ன, விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.பீ. வீரசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.