இதன்போது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எத்தகைய பிரிவினையுமின்றி நாட்டை நேசிக்கும் அனைவருடைய உதவிகளையும் பெற்றுக்கொள்ள உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டுக்கு வகைகூற வேண்டிய ஜனாதிபதி என்ற வகையில் அரசாங்கம் பலவீனமடைய ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.
இன்று முற்பகல் (06) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர் பதவிகள் மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் கட்டமைப்புகளுக்கேற்ப அனைவரும் ஒன்றிணைவதன் மூலமேயன்றி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தனியாக அரசாங்கத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடையாது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பில் தான் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர்களுடன் இணைந்து அரசாங்கத்தை பலப்படுத்தி முன்கொண்டு செல்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தலைவர் தெரிவு தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் மக்களின் வாக்குகளினால் வெற்றிபெற்ற அரசியல் கட்சியை தோல்வியடையச் செய்து எதிர்க் கட்சிகளுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் முறைமையிலுள்ள இந்த குறைபாடுகள் காரணமாக மக்கள் அபிப்பிராயம் செல்வாக்கு இழந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை திருத்துவது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன் மூலம் மக்கள் வாக்களித்த அரசியல் கட்சிகளுக்கு மட்டும் உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இம்முறை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையானது ஒருபோதும் நாட்டுக்கு நல்லதல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், உள்ளூராட்சி நிறுவன சட்டத்தை திருத்துவதன் மூலம் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த தேர்தலில் இந்த எண்ணிக்கையை 50 வீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி தொடர்பாக சில சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் போலிப் பிரசாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அல்லது ஓய்வூதியம் பெறுகின்றவர்களிடத்தில் இருந்து எவ்வித வரியையும் அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடவில்லை எனக் குறிப்பிட்டார். அமைச்சின் செயலாளரிலிருந்து கடைநிலை ஊழியர் வரை எந்த ஒருவருடைய வங்கி வைப்புகளில் எந்த வகையான வரியும் அறிவிடப்படமாட்டாது என்றும், ஒருவருடைய வங்கிக் கணக்கில் மாதாந்த வட்டியாக ரூபா 125,000 க்கு மேற்பட்ட தொகை கிடைக்குமானால் சேமிப்பு வைப்புக்கான புதிய வரி முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது அரசாங்க மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்து அமைதியான சூழலை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டுவதாக தெரிவித்தார்.
ஏப்ரல் 30ஆம் திகதி இடம்பெறும் வெசாக் பௌர்ணமி தினத்துடன் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதி பௌத்த சமய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து செயற்படுவதற்காக தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக ஊடக நிறுவனங்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், மே மாதம் முதலாம் திகதி இடம்பெறும் தொழிலாளர் தினத்தை மே 07ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.