பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார்.
21 மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்புடன் மிகுந்த அபிமானத்துடனும் கௌரவத்துடனும் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாளை முற்பகல் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அமோக வரவேற்பளிப்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இராணுவத்தினரின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள விமான சாகச நிகழ்வும் கலாசார அம்சங்களும் இடம்பெறவுள்ளன.
இதனிடையே, புனரமைக்கப்பட்டுள்ள இஸ்லாமாபாத் நகரின் சர்வதேச பௌத்த நிலையத்தினை மீள திறந்து வைக்கும் நிகழ்வும் நாளை பிற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் மலேசியா போன்ற பௌத்த மதத்தை பின்பற்றும் நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் சஹீத்கான் அப்பாஸ் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளதுடன், இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர் கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இருநாடுகளுக்குமிடையிலும் நான்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.