நாட்டைப் பற்றி சிந்திக்காது அரசியல் அதிகாரம் பற்றி மட்டுமே சிந்திக்கும் அத்தகையவர்களை மக்கள் சரியாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வுகள் 19ம் திகதி முற்பகல் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் தன்மீது வைத்த நம்பிக்கையை தான் ஒருபோதும் மீறவில்லை என்றும், அக்கொள்கையை தான் ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எத்தகைய எதிர்ப்புக்கள் வந்தபோதும் எதிர்காலத்திலும் அக்கொள்கையில் மாற்றங்களை செய்வதற்கு தான் தயாராக இல்லையென்றும் தெரிவித்தார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கு நேர்மையான அரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவையென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டை நேசிக்கின்றவர்களாக செயற்படுங்கள் என்று அனைத்து அரசியல் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
இன்று முற்பகல் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் தனியார் கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
நினைவுப் பலகையைத் திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப நிலையத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அந்நிலையத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற வடமாகாணத்தை சேர்ந்த 197 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் 10 பேர்களுக்கான நியமனங்களை வழங்கி ஜனாதிபதி அவர்கள் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் இங்கு மேலும் தெரிவித்தார்.
கற்றவர்கள் அதிகரிக்கின்றபோது நாட்டில் பிர்ச்சினைகள் குறைவடையும் என்பதுடன் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக மக்களுக்கு தேவையான கல்வியை வழங்குவது அரச மற்றும் அரசசார்பற்ற கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
இலவசக் கல்வியை பலப்படுத்துவதன்றி அதனை ஒருபோதும் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும், புதிய கல்விகொள்கையின்படி செயற்பட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தற்போதைய அரசாங்கம் புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான நிலைமையை மாற்றியமைத்திருப்பதாக தெரிவித்தார்.
தொழில்நுட்ப பாடங்களுடன் கூடிய பட்டதாரிகளுக்கு ஜப்பானில் பல்வேறு தொழில்வாய்ப்புகள் உள்ளன என்றும் இதற்கு இலங்கை பட்டதாரிகளை அனுப்புவதற்கு தான் அண்மையில் மேற்கொண்ட ஜப்பான் விஜயத்தின்போது ஜப்பானிய பிரதமருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
பேராயர் மெல்கம் ரஞ்சித், யாழ்ப்பாண ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசம், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, கல்லுாரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் ஆகியோர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் வடமாகாண தலைமை சங்கநாயக்க தேரர் ஸ்ரீநாக விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஞானரத்ன தேரர் மறைந்து மூன்று மாதங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இளம் பிக்குகள் மற்றும் யாழ்ப்பாண சர்வ சமய ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கூடத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை (2018.03.19)
அனைவருக்கும் கடவுளின் ஆசீர்வாதங்கள்
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கூடத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒரு வார காலமாக வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டிருந்ததால் எனது கடமைகள் குவிந்து கிடக்கின்றன. ஆயினும் இந்த விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்ததை நான் மறக்கவில்லை அதனால் மெல்கம் ரஞ்சித் பேராயரிடம் இது தொடர்பாக விசாரித்தேன். அதற்கு அவர் யாழ்ப்பாண ஆயரும் கல்லூரி அதிபரும் மாணவர்களும் எனது வருகையை பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறினார். எவ்வாறாயினும் மாணவர்களுக்கும் வடக்கு மக்களின் மீது எனக்குள்ள மதிப்பும் அன்பும் காரணமாகவே நான் இன்று இங்கு வருகை தந்தேன்.
எனது நண்பர் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தனது உரையில், வடக்கு மக்கள் எனக்களித்த ஒத்துழைப்பு தொடர்பாக குறிப்பிட்டார். அவர்கள் வழங்கிய அந்த ஒத்துழைப்பு எனது மனதில் இன்னும் இருப்பதனாலேயே நன்றிக்கடனாக வடக்கில் இடம்பெறும் சகல நிகழ்வுகளிலும் நான் பங்கு பற்றுகிறேன். எமக்கு பல அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு காண வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. மனிதர்களை நேசிப்பதும் சிநேகமுடன் வாழ்வதும் ஏனையவர்களுக்கு உதவி புரிவதும் மனிதர்களிடம் காணப்பட வேண்டிய அடிப்படைப் பண்புகளாகும். அவை மனிதர்களுடைய பிரதான பொறுப்பும் கடமையுமாகும். நான் அந்தக் கொள்கையுடன் வாழ்வதனாலேயே இத்தகைய முக்கிய சந்தர்ப்பங்களில் நான் பங்குகொள்கிறேன். சுமார் 2000 மாணவர்கள் அளவில் கல்வி பயிலும் இப்பாடசாலையில் இன்று நாம் புதிய தொழில்நுட்ப கூடம் ஒன்றினை திறந்து வைத்தோம். அது பழைய மாணவர்களின் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஏனெனில் அவர்கள் மிக உன்னதமான ஒரு பணியை நிறைவேற்றியுள்ளனர். இத்தகைய உன்னத பங்களிப்புக்களை வழங்கக்கூடிய பழைய மாணவர்கள் பெருமளவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பது பாடசாலையின் பெரும் பாக்கியமாகும் என நான் கருதுகிறேன்.
இலங்கையின் பெரும்பாலான நகர்ப்புற பாடசாலைகளுக்கு மிகப் பலம்மிக்க பழைய மாணவர் சங்கங்கள் காணப்படுகின்றன. இப்பாடசாலை 100 வருடங்களை விட பழைமையானது. இங்கு உரை நிகழ்த்தியவர்கள் இப்பாடசாலையில் சிங்கள மாணவர்கள் கூட கல்விகற்றதாக குறிப்பிட்டார்கள். இற்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னர் வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் சிங்கள மாணவர்கள் கல்வி கற்றார்கள் என்பதை நானும் அறிவேன். முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர், கே.பி.ரத்னாயக்க அநுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அவர் யாழ்ப்பாண பாடசாலை ஒன்றிலேயே தனது ஆரம்பக் கல்வியை பெற்றார். பாடசாலை என்பது கல்வியை கற்பிக்கும் இடமாகும். மொழி, இனம் அல்லது ஏனைய பேதங்களின்றியே கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். கல்வியை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் எந்தவொரு வேறுபாடுகளும் காணப்படக்கூடாது. அதுவே கல்வி தொடர்பான அடிப்படை சித்தாந்தமும் கொள்கையுமாகும். இப்பாடசாலையிலிருந்து உருவான மாணவர்கள் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
உலகின் எந்தவொரு நாட்டிலும் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அந்நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுத்தல் அவசியமாகின்றது. கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்நாடுகளில் பிரச்சினைகள் குறைகின்றன. எந்தவொரு நாட்டிலும் பொருளாதார, அரசியல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தலும் ஒரு காரணமாகும். நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆற்ற வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக காணப்படுவது மக்களுக்கு சிறந்த கல்வியையும் அறிவையும் பெற்றுக்கொடுத்தலாகும். இது ஒரு அரசாங்க பாடசாலை அல்ல. அரச மற்றும் தனியார் துறைகளில் கல்விக்கு மட்டுமன்றி எனைய விடயங்கள் தொடர்பாகவும் போட்டித்தன்மை காணப்பட வேண்டும். அப்போட்டித் தன்மையினூடாக பிள்ளைகளுக்கே அதிக நன்மைகள் கிடைக்கின்றன. அது சமூகத்திற்கு உகந்த விடயமாகும். அரச பாடசாலைகளில் இலவச கல்வி கிடைக்கின்றது. அரச உதவிகளைப் பெறும் தனியார் பாடசாலைகளும் காணப்படுகின்றன. அரச மற்றும் அரச சாரா விடயங்கள் அனைத்திற்கும் உதவி வழங்க வேண்டுமென்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாகும்.
இப்பாடசாலையில் நீச்சல் தடாகம் ஒன்று இல்லை என எனக்கு அறியக் கிடைத்துள்ளது. அதிபர் அதனை எனக்கு கூறவில்லை. மெல்கம் ரஞ்சித் பேராயரே எனக்கு இதனை தெரிவித்தார். அதற்கு நான் உதவி வழங்க எதிர்பார்க்கின்றேன். அதற்கான திட்டத்தையும் மதிப்பீட்டையும் எனக்கு அனுப்பி வையுங்கள். கல்விக்கு நாம் முன்னுரிமை அளித்தல் வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் நான் கலந்துகொண்டேன் என்பதை நீங்கள் ஊடகங்களினூடாக அறிந்திருப்பீர்கள். அதில் 47 நாடுகளின் அரச தலைவர்கள் பங்குபற்றினார்கள். அவர்களுடன் நான் சிநேகபூர்வமாக உரையாடினேன். அந்தந்த நாடுகளிலும் எமது நாட்டிலும் காணப்படும் கல்வி முறைகள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். எமது நாட்டில் முதலாம் தரத்திலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது என்பதை நான் சுட்டிக் காட்டினேன். சில தலைவர்கள் தமது நாடுகளில் நான்கு வருடங்கள் இலவச கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்கள். சிலர் 08 வருடங்கள் இலவச கல்வியை வழங்குவதாகவும் மேலும் சிலர் 15 வயது வரை இலவசக் கல்வியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெரும்பாலான நாடுகள் பல்கலைக்கழக கல்வியை தாம் இலவசமாக வழங்குவதில்லை எனவே குறிப்பிட்டார்கள்.
சீனா ஒரு வளர்ச்சியடைந்த நாடாகும். ஆனால் சீன பல்கலைக்கழகங்களில் எந்தவொரு மாணவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை. எமது நாட்டில் எவ்வளவு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன? அரசாங்கம் இலவசக் கல்வியை வழங்குகின்றது. இலவச மருத்துவம் வழங்குகின்றது. ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசாங்கம் நட்டம் அடைகின்றபோதிலும் மக்களுக்கு சேவையாற்றுகின்றது. பல உலக நாடுகள் எம்மை போன்று சகல விடயங்களையும் இலவசமாக வழங்காத காரணத்தினாலேயே அவை வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் அப்படி நடைபெறுகின்றதென்பதனால் நாம் இலவசமாக வழங்கும் எதனையும் கட்டுப்படுத்தப் போவதில்லை. தொடர்ந்தும் வழங்குவோம். கல்வியை வழங்குகையில் புதிய கல்விக் கொள்கைகளினூடாக செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. இன்று 197 வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றது. அவர்கள் முதலாவது வருடத்தில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். அதன் பின்னர் அரச சேவையில் நிரந்தர உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படுவர். இன்று நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலானோர் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் அரச வேலைவாய்ப்புக்களை வழங்க கோரி ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துகின்றனர். அவ்வாறு ஈடுபடுவதற்கு அவர்களது தவறு ஏதும் காரணமல்ல. அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி முறையிலேயே தவறு காணப்படுகின்றது. கல்விக் கொள்கைகளிலேயே தவறு காணப்படுகின்றது. தற்போது நாம் அரசாங்கம் என்ற வகையில் அவற்றை சரி செய்து வருகிறோம் பதிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களினூடாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நிலைமையை நாம் மாற்றி அமைப்போம். கடந்த வாரம் நான் இந்தியாவிற்கு விஜயம் செய்து அதன் பின்னர் ஜப்பானுக்கு விஜயம் செய்தேன். ஜப்பானிய பிரதமருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டேன். எமது பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பதை நான் அதன்போது அறிந்து கொண்டேன்.
இன்று ஜப்பான் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினையாக அந்நாட்டில் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோரின் பற்றாக்குறை காணப்படுகிறது. அவர்களுக்கு தொழில்நுட்ப பட்டதாரிகள் முக்கியமாக தேவைப்படுகின்றனர். எமது நாட்டின் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்பு உள்ளது. நான் அது தொடர்பாகவும் கலந்துரையாடினேன். ஆகையினால் எமது கல்விக் கொள்கைகளை உருவாக்குகையில் தொழில்நுட்ப பாடங்களையும் விஞ்ஞான பாடங்களையும் தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களையும் பயில நாம் முதலிடம் அளிக்க வேண்டும். ஆகையினால் ஆரம்ப கல்வியைப் போன்றே உயர் கல்வியை தொடரும் போதும் பொருத்தமான பாடப்பரப்புக்களைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். அதன்பொருட்டு மாணவர்களுக்கு நாம் முறையாக வழிகாட்ட வேண்டும். இந்தக் கல்வி முறையிலுள்ள போட்டித்தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவ்விடயத்தில் நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசாங்கம் என்றவகையில் இதற்கான அனைத்து விடயங்களையும் நாம் நிறைவேற்றுவோம்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இங்கு பல விடயங்களைக் குறிப்பிட்டார்கள். அவர்கள் தெரிவித்த விடயங்கள் தொடர்பாக நாம் எப்போதும் பொறுப்புடன் செயற்படுகிறோம். இன்று எமது நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையினை நீங்கள் அறிவீர்கள். நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தாமே உருவாக்கிக் கொண்ட தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காணப்படுகின்றன. அவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சிகைகளுக்கு தீர்வு காண வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு தேசிய ஒற்றுமையை பலப்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. எவ்வாறாயினும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் காணப்படுகின்றது. இவற்றிற்கு ஏமாறும் குழுவினரும் நாட்டில் உள்ளனர். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உண்மையான அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு தேவையாகும். நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? பிரதமர் யார்? என்பது மக்களின் முக்கிய பிரச்சினையல்ல. இவ்வாறு நீண்ட காலமாக சிலர் செயற்பட்டுள்ளனர். சொற்ப அளவினரே நாட்டை நேசித்து செயற்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் நாம் படிப்பினையாக கொள்ள வேண்டும். நாட்டை நேசிக்காத, அதிகாரங்களை பற்றி மாத்திரமே சிந்திக்கும் அரசியல்வாதிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நான் அந்த நம்பிக்கையை உடைத்து எறியவில்லை. அந்த கொள்கைகளை நான் மாற்றிக்கொள்ளவும் இல்லை. மாற்றப்போவதும் இல்லை. மக்கள் சரியான விடயங்களை நிறைவேற்றுபவர்கள் யார் என்பதை இனங்கண்டு கொள்ள வேண்டும். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் நாம் சிறந்த புரிந்துணர்டன் செயற்பட வேண்டும். நாட்டை நேசித்து கடமைகளை ஆற்றுங்கள் என நான் உள்ளூராட்சி மன்ற தலைவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய செயற்படாதீர்கள். நாட்டின் எதிர்காலத்தை எண்ணியே செயற்படவேண்டும்.
இன்று நான் இங்கு வரும்போதும் காணாமல்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. காணாமல்போனோர் அலுவலகத்தை தாபிக்கும் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வலுவலகம் தற்போது தனது கடமைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பாக நாம் எமது கொள்கைகளை தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே இவ்விடயம் தொடர்பாக நாம் மேலும் கதைத்துக்கொண்டே இருக்க வேண்டியதில்லை.
நாம் அனைவரும் இணைந்து நாட்டின் நன்மைக்காக செயலாற்றுவோம். இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம். பிரச்சினைகளை இல்லாதொழிக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மாணவர்களுக்கும் இங்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
{jathumbnail off}