இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற மகளிர் தின தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

”வலுவான பெண்ணே – முன்னேற்றத்தின் வழிகாட்டியாகிறாள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த வைபவம் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டிற்காக பெண்கள் மகத்தான செயற்பணிகளை நிறைவேற்றியுள்ளனர் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், சகல இனங்களுக்கிடையிலும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்பி அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவதே தாய்மையை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் சமுதாயத்தின் தற்போதைய கடமையாக உள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

தாய்மை மற்றும் பெண்களின் உரிமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றி பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய கௌரவத்தினையும் மதிப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது தொடர்பில் சமூகத்தின் சகல அங்கத்தவர்களும் தமது பொறுப்பினை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டிற்காக அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் சகல பெண்களுக்கும் தேசத்தின் கௌரவத்தினை வெளிப்படுத்த இதனை ஒரு சிறந்த சந்தர்ப்பமாக ஜனாதிபதி அவர்கள் கருதினார்.

இம்முறை மகளிர் தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ”செனேஹச – (அன்பு)” விசேட சஞ்சிகை சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டாரவினால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பெண் தொழில்முயற்சியாளர்களைப் பாராட்டி விருதுகளும் சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன.

பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கலைப் பிரிவில் கல்வி பயிலும் விழிப்புலனற்ற மாணவியான டப்ளியு.ஜி. சுபோதா ஸ்ரீமாலியினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இயற்றப்பட்ட கவிதைத் தொகுப்பும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இம்மாணவியின் கல்வி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்தபோது 2013 ஆம் ஆண்டில் பிரெயில் தட்டச்சு பலகை ஒன்றினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வண. அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் பிரதேசத்தின் மகா சங்கத்தினர், பிக்குனிமார், சர்வ மதத் தலைவர்கள், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, பொலன்னறுவை றோயல் கல்லூரியின் அதிபர் ரவிலால் விஜேவங்ச உள்ளிட்ட அதிதிகள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெருந்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.