மல்வத்து, அஸ்கிரிய ஆகிய பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்ற அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினர், முஸ்லிம் மௌலவிமார்கள், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத்துறை பிரதானிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
ஏற்பட்டிருக்கின்ற பதட்ட நிலைமையையும், மக்களிடையேயுள்ள புரிந்துணர்வின்மையையும் அகற்றி சமாதானத்தை நிலைநாட்டுவதில் மதத் தலைவர்களினால் பெற்றுக் கொடுக்கக்கூடிய பங்களிப்பினைப் பற்றி இதன்போது ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மதத் தலைவர்கள், மிகச் சிறிய சம்பவங்கள் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அநாவசியமான முறையில் பரப்பி சமூகத்திற்கு பிழையான தகவல்களை பெற்றுக் கொடுக்கின்றமையே இந்த பதற்ற நிலை அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தனர்.
உண்மையான சரியான நிலைமையைப் பற்றி எந்நேரமும் மக்களுக்கு தெரியப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உண்மையான நிலைமை பற்றி மதத் தலைவர்களின் பங்களிப்பில் ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதேபோன்று நாட்டின் அனைத்து இன மக்களுக்குமிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி இவ்வாறான அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தவிர்க்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, மதத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கக்கூடிய அனைத்து விதமான முயற்சிகளையும் எடுப்பதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இதன்போது பொலிஸ் மற்றும் முப்படைகளுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், குறிப்பிட்ட பிரதேசத்தினுள் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு தம்மால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து தீர்மானங்களையும் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று இந்த மோதல்களில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து எந்தவிதமான பாகுபாடுமின்றி அந்நபர்களுக்கு எதிராக சட்டத்தை மிக உறுதியாக செயற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு மேலும் ஆலோசனை வழங்கினார்.
இப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினால் முன்னெடுக்கப்படும் நடைமுறைகளுக்கு மேலதிகமாக, தத்தமது தொகுதிகளின் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களுக்கிடையில் சமாதானத்தை நிலைநாட்ட தேவையான தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்குமாறு இதன்போது ஜனாதிபதி அவர்கள் மதத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் வண.கலாநிதி நியங்கொட விஜித்தசிறி தேரர், மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் வண.திம்புள் கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர், அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் வென்டருவே உபாலி அநுநாயக்க தேரர், வண.அல்லே குணவன்ச தேரர், வண.கலாநிதி மெதகொட அபேதிஸ்ஸ தேரர், வண.பேராசிரியர் இந்துராகாரே தம்மாநந்த தேரர் ஆகிய பௌத்த மதகுருமார் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் கண்டியின் பிரதம மௌலவி பஸ்லர் ரஹுமான் உள்ளிட்ட மௌலவிமார்களும் கண்டி புனித அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை வண.ஐவன் அவர்களும் கண்டி ஸ்ரீ விநாயகர் கோவிலின் பிரதம தர்மகர்த்தா கிருஷ்ணமூர்த்தி கோவிந்த குருக்கள் ஆகியோர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்களும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் பாதுகாப்புத் தரப்பின் பிரதானிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.