சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் பின்வருமாறு ,
முன்னேற்றகரமான, ஒழுக்கநெறி மிக்க சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஆண் பெண் என இருபாலாரும் சமூகத்தில் சம அளவில் மதிக்கப்படுவதை வலுவூட்டுதல் மற்றும் பெண்களை அதில் பங்காளர்களாக மாற்றிக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக சமூகம் என்ற வகையில் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டும். அதன் ஊடாக சிறந்த பணிகளை ஆற்றுவதற்காக பெண்களை வலுவூட்டுவதற்குப் பொருத்தமான நிலையான சூழலொன்றை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.

வீட்டுப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதுடன் தொழிலொன்றில் ஈடுபடும் பெண்ணைப் போன்றே தொழில் செய்யாவிடினும் வீட்டின் பொருளாதாரத்தை முகாமை செய்து ஏனைய பொறுப்புக்களை நிறைவேற்றும் பெண்களும் நாட்டின் பொருளாதாரத்திற்கு, சமூக இருப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்றனர். 'பலம் மிக்க அவள் - முன்னேற்றத்தின் பாதைகளைத் திறந்து விடுகிறாள்' எனும் 2018 சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் அவளுடைய முக்கிய பங்களிப்பை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்த நாட்டின் கல்வி, நிர்வாகம், இலக்கியம், கலை போன்ற பல்வேறுபட்ட துறைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவில் காணப்பட்டாலும், அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. அரசியல் துறையிலும் பெண்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 25% ஆக அதிகரிக்க முடிந்தமை நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும். அவளுக்குத் தனது சிறப்பான திறமைகள் ஊடாக சமூக முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு அதன் மூலம் கிடைக்கும்.

குறிப்பாக பெண்களுக்கும், பொதுவாக மக்களுக்கும் மிகவும் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் சுதந்திரமான உள்ளத்துடன் வாழ முடியுமான சமூக, பொருளாதார சூழலொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எமது அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கு அனைத்துப் பெண்களினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்த்து, சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்
2018. 03. 06