மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு 03ம் திகதி பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
இருநூறு பட்டதாரிகளுக்கும் 40 டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இதன்போது ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. 21 பேருக்கான நியமனங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
புதிய கல்விக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி கல்வி முறைமையில் சில மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக நாட்டின் வளமான பட்டதாரிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் தொழில் உட்பட ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த யுத்தத்தின் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு விசேட ஜனாதிபதி படையணிகளை தாபிப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளுக்கான உபகரணங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, தலைமைச் செயலாளர் சரத் அபே குணவர்தன, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள் அம்பிட்டியே சுமணரத்ன தேரரைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
கோயிலுக்கு அருகாமையிலுள்ள மாமாங்க குளத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அதன் புனர்நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஆளுநரிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி அவ் வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.