நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் எவ்வித பின்னடைவும் ஏற்பட இடமளிக்காது அமைச்சுக்கள் மற்றும் நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 16ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் சில அமைச்சுக்களின் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கை ஒருபோதும் மாறாது எனத் தெரிவித்தார்.
தேர்தல் ஒன்றைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது சாதாரணமானதாகும். அந்த அரசியல் நிலைமைகளை கவனத்திற் கொள்ளாது மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அரச கொள்கைக்கேற்ப உரிய இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அமைச்சுக்களின் செயலாளர்களையே சாரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது நிறுவன ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்து அந்நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கான நேரசூசி தற்போது வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தி இம்மாதத்திற்குள் அக் கூட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
மேலும் அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து கண்டறிவதற்காக தான் அனைத்து அமைச்சுக்களுக்கும் விஜயம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்கால வரட்சி நிலைமைக்கு முகம் கொடுத்து காலநிலை மாற்றங்களுடன் விவசாயத்துறை மற்றும் உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் குறித்து நாட்டின் பல்கலைக்கழகங்களில் உள்ள புவியியல் மற்றும் வானியல் துறை நிபுணர்களுடன் கலந்துரையாடி தேவையான சட்டதிட்டங்களை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தேங்காய் விலை தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், தென்னங் காணிகளை துண்டாடுதல் உள்ளிட்ட காணிகளை துண்டாடுதல் சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தென்னை பயிர்ச் செய்கைக்காக பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சின் கீழ் சிறியளவிலான விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் தென்னை பயிரிடப்படாத பிரதேசங்களில் தென்னைப் பயிர்ச் செய்கையை பிரபல்யப்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.