இலங்கை உட்பட 11 நாடுகளை சேர்ந்த 242 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலுடன் நிப்பொன்மாரு கப்பல் சுற்றுப் பயண நிகழ்ச்சித்திட்டம் இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் இராஜதந்திர மட்டத்தில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் அமைச்சரவை அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உலக நட்புறவு கப்பல் சுற்றுப் பயணம் கடந்த ஜனவரி 29ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமானதுடன், கடந்த 11ஆம் திகதி இக்கப்பல் மூன்று நாட்கள் இந்தியாவில் நங்கூரமிட்டு 13ஆம் திகதி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்து 15ம் திகதி இலங்கையை வந்தடைந்தது.
இலங்கையில் நடைபெறும் பல்வேறு இளைஞர் நிகழ்ச்சித்திட்டங்களின் பின்னர் இக்கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி பிற்பகல் மீண்டும் ஜப்பான் நோக்கி பயணமாகும்.
இளைஞர் யுவதிகள் மத்தியில் கலாசார, சமூக மற்றும் அரசியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தல், பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்புதல், தலைமைத்துவ பயிற்சியை வழங்குதல் ஆகியவை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இளைஞர் பிரதிநிதிகளை ஜனாதிபதி அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், அவர்களுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.