குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கலாநிதி சந்தரதாச நாயணக்காரவினால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், குழுவின் செயலாளர் டி.எம்..கருனாரத்ன,அதிகாரி பாலித்த அபேவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மீத்தொட்டமுல்ல குப்பைகளை அகற்றுவது தொடர்பாக குறுகியகால நீண்டகால பரிந்துரைகள் குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் குபபைகள் அகற்றும் நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதற்கான மத்திய நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் குப்பைகளை அகற்றும் முகாமைத்துவம் செய்வதற்கான முறைமைகளை அமைக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இக்குழுவின் அறிக்கைகேற்ப குறித்த பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவற்கு எதிர்காலத்தில் குறித்த அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கு பணிப்புரைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கொலன்னாவை மீத்தொட்டமுல்ல குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்காக வெளி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அசாதாரணமான வகையில் அதிகரித்திருப்பாக குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையினால் 2014ஆம் ஆண்டு இதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு 64 மில்லியன் ரூபாவாகும் என்பதுடன், 2015ஆம் ஆண்டில் 182 மில்லியன் ரூபாவும் 2016ஆம் ஆண்டில் 232 மில்லியன் ரூபாவாகவும் அக்கொடுப்பனவு அதிகரித்திருப்பாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் ஆரம்பம் முதலே இந்த குப்பைகளை அகற்றுவது தொடர்பாக கொழும்பு மாநகர சபையினால் முறையான நிகழ்ச்சித்திட்டமொன்று பின்பற்றப்படாமையில் தீர்வுகளாக முன் வைக்கப்பட்ட முன்மொழிவுகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையும் இந்த அனர்த்தத்திற்கு காரணமாகுமென்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.