இவ்வீதியை திறந்து வைப்பதன் மூலம் மக்களுக்கு சுமார் 50 கிலோமீட்டர் பயணத்தூரம் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், எவ்வித பேதங்களுமின்றி யாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி என்றவகையில் தான் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் 05ம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதற்காக செய்யமுடியுமான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தது சுதந்திர ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்பும் எதிர்பார்ப்புடனேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தான் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்காக காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தற்போது சுமார் 75வீதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய காணிகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் நீண்டகாலமாக மக்கள் குரல் எழுப்பி வருவது தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இது தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார். காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்பேணுவதற்காக எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன், அவர்களின் கோரிக்கைகேற்ப தேவையான கலந்துரையாடல், தேடுதல் நடவடிக்கைகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.