சுதந்திர தேசமாக ஏழு தசாப்தங்களை கடந்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானிய எலிசபெத் மகாராணி விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவுகள் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் காலங்களில் இரு நாட்டு மக்களுக்கு மத்தியில் இருந்துவரும் உறவுகள் மேலும் பலமடையும் என தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று நிகழ்வில் தனிப்பட்ட முறையில் பங்குபற்றக்கிடைக்காததையிட்டு கவலையடைவதாக குறிப்பிட்டுள்ள மகாராணியார், இந்த நிகழ்வுக்கு பிரித்தானிய அரச குடும்பத்தின் உறுப்பினரான இளவரசர் எட்வேட் தம்பதியினரை பங்குபற்றச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தில் இலங்கை நல்லிணக்கம், பொறுப்புகூறல் மற்றும் நீதியான ஆட்சி என்பவற்றை சிறப்பாக முன்னெடுத்துவரும் இச்சந்தர்ப்பத்தில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனப்பூர்வமாக வாழத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இலங்கை நல்லிணக்கத்தினதும் சுபீட்சத்தினதும் நோக்கங்களை உறுதியாக அடைந்துகொள்ளும் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டின் அவர்களும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி சீ ஜிங் பிங் அவர்களும் விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் பேரரசர் அக்கினோ அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
துருக்கிய ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகான் அவர்களும் இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் துருக்கிக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்குடன் மிக விரைவில் தான் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.