உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ 05ம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார்.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பேணப்பட்டுவருவதாக குறிப்பிட்ட ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து மேலும் கண்டறிய விசேட தூதுக்குழுவொன்றை இம்மாதம் கடைசியில் இலங்கைக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், உண்மையான நண்பனாக ஜப்பான் இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம், கலாசாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஆகிய துறைகளில் ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் உதவிகளை ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார்.
கடந்த யுத்த காலத்தில் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் குறித்து நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஜப்பானில் இடம்பெற்ற ஜீ 7 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்புக்கும் ஜப்பான் வெளிநாட்டமைச்சரிடம் தனது விசேட நன்றியை தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவும் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்
