19ம் திகதி பிற்பகல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற தேசிய சுற்றாடல் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சுற்றாடல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்களையும் அறிவுறைகளையும் வழங்குவதற்காக 1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட சுற்றாடல் பேரவையின் 13வது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
தேசிய சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலமாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கைசார்ந்த திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
இவ்வரைபை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்வாரத்தில் முன்வைக்குமாறும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுற்றாடல் பேரவை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்.
இந்நாட்களில் மீண்டும் வில்பத்து தொடர்பாக வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தொடர்பாகவும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி, அத்தகைய தகவல்கள் கிடைத்தவுடனேயே அது குறித்து தேடிப்பார்க்கவேண்டியது குறித்த நிறுவனங்களின் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார். தவறுகள் இடம்பெற்றிருப்பின் அதனை சரிசெய்வதற்கும் அல்லது அந்த ஊடக அறிக்கையை சரிசெய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய சுற்றாடல் கொள்கையொன்றின் அடிப்படையில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் போது எந்தவொரு அரசாங்க அதிகாரியும் பயப்பட வேண்டியதில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்பிற்கான தீர்மானங்களுக்கு எவரும் சவால்விடுவதற்கு இடமளிக்காத வகையில் தான் சுற்றாடல் துறை அமைச்சைப் பொறுப்பேற்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுற்றாடல் அதிகார சபை மற்றும் குறித்த நிறுவனங்களினால் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது அவற்றை தொடர்ந்தும் பின்தொடரல்செய்யவேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எந்த ஒருவருக்கும் சுற்றாடலை அழிவுக்குட்படுத்த இடமளிக்காதிருப்பது குறித்த அனைத்து நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
தேசிய சுற்றாடல் பேரவையின் புதிய தலைவராக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யு.ஏ. சந்திரசேன தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த வருடம் சுற்றாடல் பேரவையின் தலைவராக இருந்த சூழலியலாளர் சட்டத்தரணி ஜகத் குணவர்த்தனவின் சேவை ஜனாதிபதி அவர்களினால் பாராட்டப்பட்டது.