இன்று பிற்பகல் (16) திருகோணமலை இந்து கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற அரச நத்தார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஒரே நாட்டில் வாழும் மக்கள் என்ற வகையில் நத்தாரின் செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்குடன், “அன்பின் ஊற்று நத்தார்” என்ற கருப்பொருளின் கீழ் இம்முறை திருகோணமலை மாவட்டத்தை மையப்படுத்தி அரச நத்தார் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மானிட அன்பு நத்தாருடன் தோற்றம்பெறுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நத்தாரின் நோக்கமான ஏழைகளுக்காக அன்பு தீபத்தை ஏற்றுவதும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதும் அனைவருடையவும் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலத்திற்காக இனங்களுக்கிடையில் சமாதானமும், நல்லிணக்கமும் பலமாக இருக்க வேண்டும் என்பதுடன் நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றுபடுமாறு இந்த நத்தாரில் தாம் அனைவரிடமும் கேட்டுக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகிவரும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கரோல் கீதங்களுடன் அரச நத்தார் விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றதுடன், 2017 அரச நத்தார் விழாவுடன் இணைந்ததாக இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் நியுயான் வன் டெட், இலங்கை போராயர் சங்கத்தின் தலைவர் பேராயர் வின்சன் பிரனாந்து, திருகோணமலை பேராயர் நொயல் எம்மானுவெல் உள்ளிட்ட கிறிஸ்தவ பேராயர்கள், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப், சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய விவகார அமைச்சின் செயலாளர் எசல வீரகோன், கிறிஸ்தவ அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர் குணவர்தன, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.