ரஜரட்ட மக்களின் கனவை நனவாக்கும் வகையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பரீட்சார்த்த நடவடிக்கைக்காக நீரை வெளியிடும் நிகழ்வு இன்று (02) பிற்பகல் சுபவேளையில் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தற்போது நிலவும் மழைக் காலநிலையைத் தொடர்ந்து மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான 178 மீட்டர் அளவு நேற்று அடையப்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளைப் பார்வையிட்டதுடன், மின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைக்காக நீரை வெளியிட்டுவைக்கும் நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.
இது ரஜரட்ட மக்களுக்காக தான் நீண்டகாலமாக கண்ட கனவு எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கனவு நனவாகும் மற்றுமொரு முக்கிய தினமான இத்தினத்தை தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் விவசாய சமூகத்திற்குத் தேவையான நீர் கிடைக்கவுள்ள அதேநேரம் தேசிய மின் கட்டமைப்புக்கு 25 வோட் மின்சாரம் கிடைக்கவுள்ளது.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு மேற்கொள்ளப்படும் பரீட்சார்த்த நடவடிக்கையைத் தொடர்ந்து 72 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக மின் பிறப்பாக்க இயந்திரம் செயற்படுத்தப்பட்டு மின்சார உற்பத்தி பரீட்சிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தேசிய மின்கட்டமைப்புக்கு 25 வோட் மின்சாரத்தை சேர்க்கும் மின் உற்பத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.
நீரின் அழுத்தத்துடன் செயற்படும் நான்கு டர்பைன் இயந்திரங்களுடன் இங்கு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இவை இரண்டு 7.5 மெகாவோட் டர்பைன்களையும் இரண்டு 5 மெகாவோட் டர்பைன்களையும் கொண்டதாகும்.
மொரகஹகந்த நீர்த்தேக்கம் கடல் மட்டத்திலிருந்து 132 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் கடல் மட்டத்திலிருந்து 165 மீட்டர் வரை அதிகரித்ததும் நீர் மின்சார நிலையம் செயற்படுவதுடன், கடல் மட்டத்திலிருந்து 185 மீட்டர் வரை உச்சளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வாய்ப்புள்ளது.
இதன் மூலம் வருடாந்தம் சுமார் 336 மில்லியன் ரூபா எரிபொருள் செலவை மீதப்படுத்த முடியும்.
பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏகநாயக, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் எச்.சீ.எம். புர்கான் மற்றும் இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்ட கம்பளை முன்னாள் நகர சபை தலைவர் சரத் ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.