ன் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக இன்று (28) பிற்பகல் அங்கு விஜயம் செய்தபோது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கொரிய ஜனாதிபதி அவர்களும் அங்கு வருகைதந்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சினேகபூர்வமாக வரவேற்றார்.
இத்தகைய விசேட வரவேற்பினைத் தனக்கு வழங்கியமைக்காக தென்கொரிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த இதயபூர்வமான நட்புணர்வு தமது வாழ்வின் முக்கிய ஞாபகக்குறிப்பாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
தென்கொரிய ஜனாதிபதி அவர்களின் இந்த செயலானது அவர் இலங்கை மீதும் இலங்கை மக்களின் மீதும் கொண்டுள்ள நன்மதிப்பையும் தெளிவையும் உறுதிசெய்கின்றது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
தன்னைப்போலவே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்றவகையில் ஜனாதிபதி பதவியை அடையும் வரையில் தாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதென்பதை நினைவுகூர்ந்த தென்கொரிய ஜனாதிபதி அவர்கள், இருவருமே தற்போது மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலும் பல பொது விடயங்கள் காணப்படுகின்றதெனக் குறிப்பிட்ட தென்கொரிய ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளுமே காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்ததுடன் யுத்தத்திற்கும் முகங்கொடுத்து இறுதியில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளன எனத் தெரிவித்தார். யுத்த வெற்றியின் பின்னர் துரித அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் அதேவேளை ஊழல், மோசடி என்பவற்றிற்கெதிராகச் செயற்படுவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இத்தகைய பின்னணியில் இருநாடுகளுக்கிடையிலும் பல விசேட தொடர்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் தென்கொரிய ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
இரு அரச தலைவர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கிய ஜொக்யேசா விகாரையின் விகாராதிபதி சியோல் ஜியோங் தேரர் அவர்கள், நேர்மையான அரச தலைவர்களாக இருநாட்டு ஜனாதிபதிகளும் தமது நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
1913 ஆம் ஆண்டு அநகாரிக்க தர்மபாலவினால் ஜொக்யேசா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்த பெருமானின் புனித தந்தத்தை வழிபடக் கிடைத்தமைக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.
அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயா கமகே, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தலதா அத்துகோரல, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.