2030 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் இலங்கை அடைய வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த பேண்தகு அபிவிருத்தி நோக்கை வரைவதற்காக ஜனாதிபதி அவர்களினால் கடந்த ஜனவரி மாதம் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக பேராசிரியர் மொஹான் முனசிங்க நியமிக்கப்பட்டார்.
பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளுடன் தொடர்பான விவசாயம், போக்குவரத்து, மின்சக்தி, சுகாதாரம், கல்வி, நீர், சமுத்திரம் மீன்பிடி, நகர, பௌதிக திட்டமிடல் ஆகிய இலக்குகளினூடாக 2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கை அடைய வேண்டிய இலக்குகள் குறித்து இவ்வரைபு விரிவான விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன், அவ்விடயங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேற்படி பேண்தகு அபிவிருத்தி நோக்கு இலங்கையில் வரையப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வரைபு தொடர்பாக மக்கள் கருத்தறிவதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் தேசிய பேண்தகு கலந்துரையாடல் என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இது குறித்த மக்கள் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், இலங்கையின் எதிர்கால பேண்தகு அபிவிருத்தி நோக்கு குறித்து பொதுமக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கேற்ப குறித்த அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் லலித் சமரகோன், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.