மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான தமது முதலாவது விஜயமாக கட்டாரிற்கு இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு 26 ம் திகதி முற்பகல் இடம்பெற்றது.
கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களுக்கு கட்டார் ஆட்சியாளர் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பு அளித்தார்.
அரச தலைவர்களுக்கிடையிலான சினேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான தமது முதலாவது விஜயமாக கட்டாரிற்கு வருகைத் தந்தமைக்கு விசேட நன்றி தெரிவித்த கட்டார் ஆட்சியாளர், நீண்ட காலமாக பேணப்பட்டுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவாக முன்னெடுத்து செல்வதற்கான வாய்ப்பாக ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயம் அமையும் எனத் தெரிவித்தார்.
தற்போது உலகில் ஆகக்கூடிய தனிநபர் வருமானத்தைக் கொண்ட நாடாக கட்டார் விளங்குகின்றது. சகல துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக அரச தலைவர்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடினர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் பங்குடைமையை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதி அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக கட்டார் ஆட்சியாளரின் கவனம் பெரிதும் ஈர்க்கப்பட்டது.
மேலும் கட்டார் நாட்டிற்கு 01 தொன்னிற்கு அதிகமான நிறையுடைய பண்டங்களின் ஏற்றுமதியின்போது அறவிடப்படும் சான்றுபடுத்தல் கட்டணத்திற்கு நிவாரணமொன்றினை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக கவனம் செலுத்திய கட்டார் ஆட்சியாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தார்.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்திக்கு உதவி வழங்கவும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தினூடாக இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கவும் கட்டார் ஆட்சியாளர் இணக்கம் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் வாயு மின்னுற்பத்தி துறையில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி அவர்கள் விளக்கமளித்ததுடன், இலங்கையில் இயற்கை வாயு மின்நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்யவும் கட்டார் ஆட்சியாளர் இணக்கம் தெரிவித்தார்.
150,000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் தற்போது கட்டாரில் பல்வேறு துறைகளில் பணிபுரிவதுடன், சிலர் தமது குடும்பத்தினருடன் அங்கு வசிக்கின்றனர். அவர்களது பிள்ளைகளுக்காக இலங்கையின் பாடவிதானத்துடன் கூடிய பாடசாலையொன்றினை கட்டார் அரசின் தலையீட்டுடன் நடாத்துமாறு ஜனாதிபதி அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்த கட்டார் ஆட்சியாளர் இது தொடர்பான மேலதிக விடயங்களை கண்டறியுமாறு உரிய அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
சகல துறைகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக கண்டறிய இருநாட்டு பிரதிநிதிகளையும் கொண்ட குழுவொன்றினை நியமித்து அச்செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவூகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 07 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் Sheikh Mohamed Bin Abdur Rahman Al Thani மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளின் தூதரக அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையிலும், இலங்கையில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் இவர்கள் இதன்போது கைச்சாத்திட்டனர்.
மின்னுற்பத்தி துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்டாரின் மின்சக்தி மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் Dr. Mohamed Bin Salih Al Sada மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டாரின் பெருநகரங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் Mohamed Bin Abdullah Al Rumaihi ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அந்நாட்டின் பொதுமக்கள் சுகாதார அமைச்சர் Dr. Hanan Binth Mohamed Al Kuwari ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நிதிச் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வுகளுக்கான தகவல்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பாக கட்டார் நிதி தகவல்கள் பிரிவு மற்றும் இலங்கையின் நிதிச் செயற்பாடுகள் பற்றிய விசாரணை அலுவலகம் என்பவற்றுக்கிடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவின் கலாநிதி எச். அமரதுங்க மற்றும் குவைத்தின் நிதி தகவல்கள் பிரிவின் தலைவர் Sheikh Ahmed Bin Eid Al Thani ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிற்காக கட்டார் ஆட்சியாளரினால் வழங்கப்பட்ட விசேட விருந்திலும் இன்று ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.