இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கட்டார் வெளிவிவகார அமைச்சர் செய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல்தானி அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 25 ம் திகதி பிற்பகல் இடம் பெற்றது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையில் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் கட்டார் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இலங்கையிலுள்ள புதிய முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி விளக்கினார்.
இரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய உறவுகளை ஏற்படுத்தவும் ஜனாதிபதி அவர்களின் இந்த விஜயம் உதவும் என கட்டார் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
வெற்றிகரமான சந்தர்ப்பங்களில் மட்டுமன்றி பல்வேறு கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் இலங்கை கட்டார் நாட்டுடன் தொடர்ச்சியாக இணைந்திருந்தமை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.
நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுகின்ற இலங்கை உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் தற்போது கட்டார் நாட்டில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதுடன் எதிர்காலத்தில் இலங்கை தொழில் வல்லுனர்களுக்கு கட்டார் நாட்டில் அதிக சந்தர்ப்பங்களைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தோஹா நகரில் நடைபெற்ற கட்டார் – இலங்கை விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
கட்டார் வர்த்தக சங்கமும் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் இரு நாடுகளையும் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பங்குபற்றினர்.
இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் இலங்கை முதலீட்டுச்சபை, சுற்றுலா சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை பிரதிநிதிகள் விரிவாக விளக்கியதுடன் அமைச்சர் றிஸாத் பதியுத்தீன் மற்றும் வசன்த சேனாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
கட்டார் நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இசசந்திப்பில் கலந்து கொண்டனர்.