அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார்.
21ம் திகதி முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான அபிவிருத்தியையும் அரசியல் சீர்திருத்தத்ததையும் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றபோது பல்வேறு எதிர்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான அரசியல் சீர்திருத்தத்தை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக செயற்படுகின்ற அனைவரும் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கான உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என்றும் இன்று இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்காது விட்டால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு அவர்கள் அனைவரும் வகைகூற வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிராக விமர்சனங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கும் எவரிடமும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்த எந்தவொரு முன்மொழிவும் கிடையாதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் சீர்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை முன் வைக்குமாறு தான் அவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் உத்தேச வரைபு கூட இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதுடன், அனைவரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகளை பெற்று உரையாடலுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த சமயத்திற்குரிய இடம், நாட்டில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலான நல்லிணக்கம் மற்றும் சமத்துவமான சமூகம் குறித்த தெளிவான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்படாத விடயங்களை சுட்டிக்காட்டி சிலர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று சில பத்திரிகைககள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மக்களை பிழையாக வழிநடத்தும் போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் நாட்டுக்காக தமது பொறுப்புக்கள் என்னவென்று விளங்கி செயற்படுமாறு தான் அவர்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 63 பிரதேச நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவு செய்து தேசிய ரீதியாக இடம்பெறும் மூன்றாவது தேசிய நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்டத்தை மைமயப்படுத்தப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் பொலன்னறுவை மற்றும் காலி மாவட்டங்களில் ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அடுத்த நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைபெறும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தில் நிரந்தர காணி உறுதிகள் இல்லாத மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தல், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குதல், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி சபையினால் தென்னங் கன்றுகளை வழங்குதல், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குத் தேவையான இரண்டு பௌசர்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
உத்தியோகபூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவை நடைபெற்ற வளாகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இதன்போது முன்வைக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதே நேரம் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயார் ஜனாதிபதியை சந்தித்தார்.
குடும்பத்தின் சுகதுக்கங்களை கேட்டறிவதற்காக அவரது வீட்டுக்கு வருகை தருவதாக ஜனாதிபதி அவர்கள் மாணவி வித்தியாவின் தாயாருக்கு வழங்கிய உறுதிமொழிக்கேற்ப நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவ்வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.
மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்வி நடவடிக்கைக்காகவும் அவரது குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் முடிந்த உதவிகளை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக ஜனாதிபதி அவர்கள் வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.