48Tbps வேகமுடைய பூகோள Bandwidth பரப்பை இலங்கைக்கு உரித்தாக்கி, தென்கிழக்காசிய, மத்திய கிழக்கு மற்றும் மேற்கைரோப்பியாவைச் சேர்ந்த 17 நாடுகளின் தொலைத் தொடர்பாடல் நிறுவனங்கள் பலவற்றின் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கடலடி தரவுப் பரிமாற்ற மையம் இலங்கையை பொருளாதார டிஜிட்டல் யுகத்தை நோக்கி கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் சர்வதேச சேவை வழங்கலை வினைத்திறனாக்குவதற்காக அமுல்படுத்தப்படும் விசேட திட்டமாகும்.
கடலடி தரவுப் பரிமாற்ற மையத்தை ஜனாதிபதி அவர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக காலியிலிருந்து ஆரம்பித்து வைத்து காலியில் நிறுவப்பட்டுள்ள கேபிள் டிப்போவுக்கான அடிக்கல் நாட்டலையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொண்டார்.
அமைச்சர்களான ஹரீன் பெர்னாண்டோ, மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, பிரதியமைச்சர் தாரநாத் பஸ்நாயக்க, தென்மாகாண அமைச்சர் சந்திம ராசபுத்திர உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஸ்ரீ லங்கா டெலிக்கொம் நிறுவன தலைவர் குமாரசிங்க சிறிசேன உள்ளிட்ட பணிப்பாளர் சபையினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.