பொறியியலாளர்களின் ஆலோசனைகளைக் கவனத்திற்கொள்ளாது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக மோசமான விளைவுகளுக்கு பிரதேச மக்கள் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று உருவாகியிருக்கும் மக்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிழையான அரசியல் முடிவுகளை எடுத்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தவர்கள் அமைதி காத்து வருவதாகவும் பிழையான மதிப்பாய்வை செய்து திட்டத்தில் நிதி மோசடி செய்தவர்கள் குறித்து தனியான விசாரணையை மேற்கொள்வதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
29ம் திகதி நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
மக்கள் நிராகரித்த இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கவனம் செலுத்தியபோதும், அந்த நேரத்தில் இக்கருத்திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி நிறைவு பெற்றிருந்த காரணத்தினாலும் இதற்காக ஈரான் அரசாங்கத்திடமிருந்து பெருமளவு கடனைப் பெற்றுக் கொண்டிருந்தமையினாலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இத்திட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தான் கடந்த சில நாட்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது ஜெர்மன் நாட்டின் அகழ்வு நடவடிக்கை தொடர்பான நிபுணர் ஒருவர் இது தொடர்பாக ஆய்வை ஆரம்பித்துள்ளதுடன், மேலதிக ஆய்வுக்காக இன்னும் சில வாரங்களில் நோர்வே நாட்டின் நிபுணர்கள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று மின்சாரசபை ஊழியர்கள் மேற்கொண்டிருக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த அரசாங்கம் மின்சார சபையில் உள்ள உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு மட்டும் பெருமளவு சம்பளத்தை அதிகரித்ததுடன், கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்காத காரணத்தினால் அவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சைட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இந்தப் பிரச்சினையையும் கடந்த அரசாங்கமே உருவாக்கியது எனத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று சில சமூக ஊடகங்கள் தேசிய ஐக்கியம் மற்றும் சமய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடிப்படைவாதிகள் இவற்றைப் பயன்படுத்தி சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் இது தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தோட்டப்பகுதிகளில் உள்ள செழிப்பை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையிலும் கொண்டுவரும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தோட்டப்புற மக்கள் முகங்கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையான பிள்ளைகளின் மந்த போசனையை ஒழிப்பதற்கும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நுவரெலியா ஐலண்ட்ஸ் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நுவரெலியா ஹட்டன் டி.கே. டபிள்யு வீரதுங்க கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு விருதுகளை வழங்கிவைத்த ஜனாதிபதி, 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு முத்திரையையும் வெளியிட்டு வைத்தார்.
நுவரெலிய ஐலண்ட்ஸ் கல்லூரிக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட பத்து ஏக்கர் காணிக்கான உறுதியும் ஜனாதிபதி அவர்களினால் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணண், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் கொட்டகலை தமிழ் வித்தியாலயத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அண்மையில் தலவாக்கலை பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமது பாடசாலையிலுள்ள குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையின் பேரில் அக்குறைபாடுகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.