மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்தினால் இடம்பெயர்ந்துள்ள 3000 குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து களுகங்கை நீர்த்தேக்கத்தில் மூழ்கும் லக்கல நகரத்திற்கு பதிலாக களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்படுகின்றது.
எதிர்கால தேவைகளைக் கருத்திற்கொண்டும், புதிய நகர எண்ணக்கருவான பூங்கா நகர எண்ணக்கருவிற்கு ஏற்ப இந்த நகரம் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதற்கான மொத்த முதலீடு 4500 மில்லியன் ரூபாய்களாகும்.
நகரத்தின் மொத்த நிலப்பகுதி 300 ஏக்கர் பரப்பைக் கொண்டுள்ளதுடன், தற்போது பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, மத்திய மகா வித்தியாலயம், விளையாட்டு மைதானம், பிரதேச சபைக் கட்டிடம், பிரதேச செயலகம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், தபால் நிலையம் மற்றும் பிரதான பஸ் தரிப்பிடம் என்பவற்றின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும் ஆரம்ப வித்தியாலயம் உள்ளிட்ட 03 புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. ஒரு சில அரச நிறுவனங்கள் ஏற்கனவே புதிய நகரத்தில் செயற்படுகின்றன.
பிரதேசத்தின் சமூக, பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், தற்போது காணப்படும் கிராம பாதைகளை விரிவுபடுத்தல் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் அபிவிருத்தி வாய்ப்புக்களை இனங்கண்டு நகரம் திட்டமிடப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.
லக்கல புதிய நகரம் தம்புள்ள, மாத்தளை, நாவுல, மொரகஹகந்த, பல்லேகம, வஸ்கமுவ தேசிய வனப்பிரதேசத்தினூடாக கிராதுருகோட்டே, மஹியங்கனை பிரதான பாதையுடன் தொடர்படுவதுடன், தம்புள்ள நகரத்துடன் நேரடியாக தொடர்புபடும் பிரதான பாதைக் கட்டமைப்பு காரணமாக அரச மற்றும் தனியார் துறை முதலீடுகள் இப்பிரதேசத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்த நகரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்பு பிரதேச மக்களாலேயே ரேந்தெடுக்கப்பட்டமை விசேட அம்சமாகும். இயற்கை வளங்களிலிருந்து உயரிய பயனைப் பெறுதல் மற்றும் சனத்தொகை அடர்த்தி போன்ற விடயங்களைக் கருத்திற் கொண்டே புதிய நகரம் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இயற்கை அனர்த்தங்களை தாங்கிக்கொள்ளக்கூடிய சுற்றாடலில் நகரம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.