எதிர்வரும் மழைக்காலத்துடன் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்ததன் பின்னர் அதன் மின்னுற்பத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பிக்க முடியுமென மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
மொரகஹகந்த நீர் மின்னுற்பத்தி நிலையமே இலங்கையில் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமாகும்.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் நீரின் அழுத்தத்தினால் இயங்கும் நான்கு மின்சுழலிகளின் மூலமாக மின்னுற்பத்தி செய்யப்படவுள்ளது. 7.5 மெகாவோட் மின்சுழலிகள் இரண்டு மற்றும் 5 மெகாவோட் மின்சுழலிகள் இரண்டு என்பவற்றைக் கொண்டதாக இந்த மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
7.5 மெகாவோட் மின்சுழலிகளின் இயக்கத்தின் பின்னர் வெளியேற்றப்படும் நீரானது மேல் எலஹெர கால்வாயினூடாக மஹகனதராவ நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், 5 மெகாவோட் மின் மின்சுழலிகளின் இயக்கத்தின் பின்னர் வெளியேற்றப்படும் நீர்ரனது அம்பன் கங்கைக்கு வெளியேற்றப்பட்டதன் பின்னர் பழைய எலஹெர கால்வாயினூடாக கிரித்தலை, மின்னேரிய, கவுடுல்ல மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
மொரகஹகந்த நீர்த்தேக்கமானது கடல் மட்டத்திலிருந்து 132 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு கடல் மட்டத்திலிருந்து 165 மீட்டர் வரை உயரும்போது நீர் மின்னுற்பத்தி நிலையம் செயற்படுவதுடன், கடல் மட்டத்திலிருந்து 185 மீட்டர் வரை அதாவது நீர்த்தேக்கத்தின் உயர் மட்டம் வரை மின்னுற்பத்தி செய்யக்கூடிய வாய்ப்புள்ளது.