வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வைசெய்து நாட்டுக்கு கொண்டுவருவதற்கு பொருத்தமானவற்றை மட்டும் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
04 ம் திகதி முற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களை வசதிபடைத்தவர்களாக மாற்றுவதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதன் மூலம் 2020 ஆம் ஆண்டாகும்போது 15,000 கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கைத்தொழில் மற்றும் தேசிய தொழில் முயற்சிகளை மேம்படுத்தவும் நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கவும் விரிவானதொரு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் கிராமசக்தி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் உள்ள அனைத்து கள உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து பிரதேச அரசியல் தலைமைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதறகுத் தேவையான நிகழ்ச்சித்திட்டங்களைப் பலப்படுத்துவதற்குத் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வசதிபடைத்தவர்களின் செல்வங்கள் வசதி இல்லாதவர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டை நிர்வகிக்க வேண்டியது மத்திய வர்க்கத்தினரேயன்றி செல்வந்தர்கள் அல்ல என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
வசதியில்லாதவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவதற்கு கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனை வெற்றிபெறச் செய்யும் தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு கட்சி, நிறம் ஆகிய பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சுபீட்சமான பொருளாதார மனிதனைப் போன்று பொறுப்புக்களை நிறைவேற்றும் உரிமைகளை விளங்கிக்கொண்ட சமூக மனிதனை உருவாக்குவதும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நோக்கமாகும்.
2020 ஆம் ஆண்டாகும்போது கிராமசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரஜைகளினால் நிர்வகிக்கப்படும் 5000 கிராமசேவையாளர் பிரிவுகள் உருவாக்கப்படவுள்ளது.
மேலும் இதன் கீழ் ஒரு கிராமத்தின் சனத்தொகைக்கேற்ப ரூபா 8000 படி கணக்கிடப்படும் தனிநபர் அரச முதலீடு கிராமிய அபிவிருத்தி நிதியமாக நான்கு வருடங்களுக்கு கிராமங்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், அபிவிருத்தி தீர்மானங்கள் ஆகியவை பிரஜைகளினால் மேற்கொள்ளப்படும்போது பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி முதலீடு, பிரஜைகளின் தொழில்முயற்சியை அபிவிருத்தி செய்வதில் மூலதன வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், கிராமிய தொழில் முயற்சியை முன்னேற்றுவதற்கு தனியார்துறையின் நேரடிப்பங்கேற்பு போன்றவையும் இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
அரசும் தனியார்துறையும் கைகோர்ப்பதினூடாக வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கு அபிவிருத்தி மற்றும் ஆய்வு வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், புதிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பிலான கருத்துக்களின் அடிப்படையில் கிராமிய விவசாய தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மொத்தமாக மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கிராம அலுவலர் மட்டத்தில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைக் கட்டியெழுப்பவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கைக்குரிய அத்துரலியே ரத்னதேரர், அமைச்சர்களான சரத் அமுனுகம, எஸ் பீ திசாநாயக்க, சஜித் பிரேமதாச, தென்மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார. கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணாந்து, ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், உலக வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.