தெற்காசியாவிலேயே அதி உயர்ந்த கோபுரமான கொழும்பு தாமரைக் கோபுரம் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் 2 மணிக்கு மக்கள் பார்வைக்காக தாமரைக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டதுடன் நேற்று இரவு 10 மணி வரை அதனை பார்வையிடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. முதல் தினமான நேற்று பெருமளவு மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கு ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தமையை காண முடிந்தது.

அதன்படி இன்று முதல் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையும் தாமரைக் கோபுரத்தை பார்வையிடுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

113 மில்லியன் டொலர் நிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்தின் பெப்ரவரி 28-ம் திகதி நிறைவடைந்தன.

அதனை பார்வையிடுவதற்கு 500 ரூபாய் பிரவேச பத்திரம் மற்றும் வெளிநாட்டவர்கள் அதனைப் பார்வையிடுவதற்கு 20 டொலர்களும் கட்டணமாக அறவிடப்படுவதுடன் பத்து வயதுக்கு குறைந்தவர்களுக்கு 200 ரூபா கட்டணமும் அறவிடப்படுகின்றன.