ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பிரதமராக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன இன்று உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் செயலகத்தில் இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் அவர் நாட்டின் 27ஆவது பிரதமராக   சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

73 வயதான புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன முன்னாள் அமைச்சர் பிலிப் குணவர்த்தன மற்றும் இடதுசாரி அரசியல் பிரமுகரான குசுமா குணவர்த்தன தம்பதிகளின் புதல்வராவார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்ற அவர் தேசிய சர்வதேச பல்கலைக்கழகங்களின் பட்டதாரியாவார்.

முன்னாள் அமைச்சரான இந்திக்க குணவர்த்தன, பிரதியமைச்சரான கீதாஞ்சன குணவர்த்தன, முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் பிரசன்ன குணவர்த்தன ஆகியோரின் சகோதரராவார்.

1983 ஆம் ஆண்டு இடைக்கால தேர்தல் ஒன்றில் மஹரகம தொகுதியில் போட்டியிட்டு முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட அவர், போக்குவரத்து, நீர் வழங்கள், உயர்கல்வி, நகர அபிவிருத்தி, நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி,வெளிவிவகார மற்றும் தொழில், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பல்வேறு காலகட்டங்களில் பதவி வகித்துள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாகவும் பதவி வகித்துள்ள அவர்  தற்போது பாராளுமன்றத்தின் சபை முதல்வராகவும் பணியாற்றுகின்றார்.

சத்தியப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் தினேஷ் குணாவர்த்தனவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.